Thursday, February 20, 2020

பா. வெங்கடேசன்

பா. வெங்கடேசன்
தாய்.மொழி !
தாய்.மொழி என்பது இலங்கையை சேர்ந்த ஆர்.எம்.நெளஸாத் என்பவர் எழுதிய ஒரு சிறுகதை. எப்பவோ ஒருநாளில் படித்தது. ஒரு இலங்கைத் தமிழன் தன் அடையாளங்களை மறைத்து தாய்லாந்து நாட்டின் ஹெங்க்லா என்னும் நகரில் வாழ்ந்து கொண்டிருப்பான். தாமோதரநாதன் என்கிற தன் பெயரை மறைத்து, தாமோங் என்கிற பெயரில், தன் தாய்மொழியை மறைத்து, தன் இனக்குழுவை மறைத்து, உணவு பழக்கவழக்கங்களில் இருந்து மொத்தமும் மறைத்து ஒரு தாய்யிக்காரனை போல் வாழ்ந்து கொண்டிருப்பான்.
அவன் ஒரு அகதி என்பதை அறிவித்துக் கொள்ள கூச்சமும், அவமானமும் ஒன்றுசேர வாழ்ந்து கொண்டிருப்பவன்.தினமும் தனிமையில் இருப்பவனுக்கு தங்குமிடமோ, உணவோ, வேலையோ, பிரச்சனைகள் இருக்காது. ஆனால், தன் தாய்மொழியில் எவருடனும் பேச முடியாத ஒரு தேசத்தில் ஒரு இடத்தில் வாழ்வது வாய் பேச முடியாத ஒரு ஊமை போல் உணர்வான்.
ஒருநாள் அவன் பணிபுரியும் இடத்தில் திருடியதாக குற்றம்சாட்டி ஒருவனை மொட்டையடித்து இழுத்து கொண்டு வருவார்கள். அவனை ஒரு சித்ரவதை முகாமில் அடைத்து தாமோங்' கை காவல் பணியில் அமர்த்துவார்கள். கொடுமையான விசாரணை முறைகளில் அந்த பெயர் தெரியாத திருடன் தன் தாய் மொழியான தமிழில் அலறுவான். தாம் ஒரு நிரபராதி என்று கதறுவான். இதையெல்லாம் கேட்டு கொண்டிருக்கும் தாமோங் அவன் பிரச்சனைகளை புரிந்து கொண்டும், மொழி அறியாத ஒரு தேசத்தில் தன்னுடைய தாய் மொழியில் ஒருவன் கதறுவதை காணச் சகிக்காமல் அவனை விடுவித்து தப்ப செய்திடுவான். தாய்மொழியின் பற்று காரணமாக ஏக்கம் காரணமாக உணர்ச்சிகளின் உந்துதலுக்கு உட்பட்டு, பணிபுரியும் இடத்தின் சூழலை அறியாமல், தன்னுடைய இனக்குழுவை சேர்ந்தவனை தப்பவிட்டத்திற்கு தண்டனையாக தாமோங்' அந்த சித்ரவதை முகாமில் சிக்கி கொள்வான்.
இந்த சிறுகதையை படித்து முடிக்கும்போது ஒரு உணர்வு குவியலில் சிக்கி தவிப்பதை தவிர்க்க முடியாது.
சரியாக பண்ணிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு தென்கொரியாவின் பூசான் நகரில் சில மாதங்கள் பணிபுரிய வேண்டிய ஒரு சூழல். தாமோங்'கை போல் தனிமையில் மாட்டிக்கொள்ளவில்லை என்றாலும், மோசமான சீதோஷ்ண நிலை, சாப்பிட முடியாத உணவுவகைகள், மொழி அறியாத தேசம், இப்படி பிறந்தது முதல் கண்டிராத ஒரு சூழலில் அங்கே பெரும் பிரச்சனை என்பது மொழிதான். கடந்து போகும் முகங்களில் நம்மூர்காரனை தேடுவது. இந்திய முகம் யாரேனும் தெரிந்தால் நீங்க தமிழா? என்று தமிழில் கேட்பது. தாய்மொழியில் பேசுவதற்கு தவித்தது பசியை கூட சில சமயங்களில் மறக்கடித்தது. நெளலாத்தின் தாய்.மொழியை படித்தபோது தருணத்தில் தாமோங்' மனநிலையிலே வாசித்து முடித்தேன்.
ஒரு மனிதனின் அடையாளம் என்பதில் மொழி முக்கியமானது. நம்மை யாரென்று வெளிப்படுத்திக் கொள்வதில் தாய்மொழியே அடையாளம். ஆங்கிலேயன், பிரெஞ்சுகாரன், உலகத்தை ஆண்ட பரம்பரைகள் தன் மொழியின் மூலமே தன்னுடைய கொடியையும் நிறுவினான். இந்தியாவில் இருந்து உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் மொழியின் அடிப்படையிலே ஒன்றிணைந்து கொள்கிறார்கள். ஆயிரம் பேர் வசிக்கும் வெளிநாட்டு அடுக்குமாடி குடியிருப்புகளில் தமிழர்கள் மலையாளிகள் தெலுங்கர்கள் இந்திகாரர்கள் என்று இயல்பாகவே பிரிந்து குழுவை ஏற்படுத்தி கொள்கிறார்கள். அவர்கள் ஒன்றிணைவது இந்திய பாஸ்போட் விசாவில் மட்டுமே. பொங்கல் விழாவை தமிழர்களும், ஓணாம் பண்டிகையை மலையாளிகளும், உகாதியை தெலுங்கர்களும். ஹோலியை இந்திகார்களும் மொழியின் அடிப்படையிலே பிரித்து கொள்கிறார்கள். மொழி என்பது உணர்வை வெளிப்படுத்தும் வெறும் கருவியே என்பவர்களிடத்தில் தள்ளியே இருங்கள். அவர்கள் நம் அடையாளத்தை மாற்ற நினைக்கும் தந்திரகாரர்கள்.
ஆம்.! இன்று உலக தாய்மொழி தினம்.
பா.வெங்கடேசன்.

Wednesday, January 15, 2020

அனிஷா மரைக்காயர்

இலங்கை தமிழ் முஸ்லிம் சார்ந்த படைப்புகளை விரும்பி படிப்பதுண்டு. முன்பு ஒரு முறை தீரன் நவ்சாத் எழுதிய ஒரு சிறுகதை தொகுப்பு ‘வெள்ளிவிரல்’ மற்றும் அவரது ‘கொல்வதெழுதல்’ நாவல் படித்ததுண்டு.
அவரது வெள்ளிவிரல் சிறுகதை படித்துவிட்டு ஒரு நாள் முழுவதும் சிரித்து கொண்டிருந்தேன். அதன் தாக்கத்திலே ‘உலக புகழ்பெற்ற முதலைமார்க்கு ஜட்டிகாரன்’ எழுதவும் தோன்றியது .