Sabarullah Caseem
தீரன் நௌஷாதின் வெள்ளி விரல்- கழுத்தில் பதியும் கூர்மை
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
யுத்தமே என்னை எழுதத் தூண்டிற்று. முப்பது வருட யுத்த காலம் முழுவதும் நான் முப்பது வருட சேவைக் காலமுள்ள அரச ஊழியனாகவே இருந்தேன். இக்காலகட்டத்தில் யுத்த அரசியல் செய்து கொண்டிருந்தவர்கயினதும், அரசியல் யுத்தம் செய்து கொண்டிருந்தவர்களினதும் யுத்தம் செய்யாமல் அரசியலும் செய்யாமல் அப்பாவித்தனமாக அலைந்து கொண்டிருந்தவர்களதும் நடத்தைக் கொலைங்களைக் கண்டு மனம் பேதலித்த நிலையில் உள நோயின் விளிம்பில் நிற்கும் ஒரு மனிதன் என்ன செய்யலாம்……? ஒன்றில் தற்கொலை செய்யலாம். அல்லது ஏதேனும் எழுதலாம். நான் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தேன்….”
என்று தனது எழுத்தின் பூர்வீக வரலாறு சொல்லும் காலச் சுவடு இதழ் 2009ம் ஆண்டு நடாத்திய சுந்தரம் ராமசாமி நினைவு குறுநாவல் போட்டியில் “நட்டுமை” எனும் நாவலுக்கு முதற் பரிசு பெற்ற தீரன் ஆர். எம். நௌஷாத்தின் பன்னிரெண்டு சிறுகதைகள் அடங்கிய காலச் சுவடு பதிப்பாக 2011ம் ஆண்டு வெளியான பன்னிரெண்டு சிறுகதைகள் அடங்கிய வெள்ளி விரல் தொகுப்பில் தன்னை எழுதத் தூண்டிய மனோ நிலையை துயரோடு பகிர்கின்றார். இப்படித்தான் அவரது எழுத்துகளின் சாலை வழிப் பயணம் ஆரம்பித்திருக்கின்றது.
அவ்வப்போது எழுதிய கதைகளின் தொகுப்பாக வநத்திருக்கின்றது இந்த வெள்ளி விரல்.
கொஞ்சம் வேதனை கொஞ்சம் வெட்கம் என்று சரி சம விகித்திதில் கலந்து கொண்டு எனது வாசிப்பின் வாசஸ்தலத்தினை பழிப்புக் காட்டியது போலிருக்கு எனக்கு. இல்லையென்றால் 2011ல் வெளியாகி கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழிந்த நிலையில் தீரனின் வெள்ளி விரல் இப்போதுதான் கைக்கு கிடைத்திருக்கின்றது. ஐந்து வருட காலம் இப்படிப்பட்ட ஒரு அற்புதமான சிறுகதைத் தொகுப்பினை எப்படி மிஸ் பண்ணினோம் என்ற கேள்விக்கு எனனிடம் விடையாக வருத்தம் மட்டுமே இருக்கின்றது.
நேற்று (2016-04-21) இரவு எட்டு மணியிலிருந்து பதினொரு மணி வரைக்கும் புழுக்கம் பொழியும் அந்த இரவின் வியர்வைச் சரப்பிகளிலிருந்து விடு படாமற் போயிருந்தாலும் மிக நிதானமாக வெள்ளி விரல் சிறுகதைத் தொகுதியினை வாசித்து முடித்திருந்தேன். மொத்தமாக பன்னிரெண்டு சிறுகதைகள். ஒரு கதையைத் தவிர ஏனைய எல்லாக் கதைகளும் பரிசுக் கதைகள் என்பது ஸ்பெஷல் ஃபீச்ச்ர். எல்லாக் கதைகளையும் படித்து முடித்த போது அந்த இரவே தீரனோடு மிக நீண்ட உரையாடலினை நிகழத்த வேண்டுமென்ற வெறி கொண்ட மனசின் வேட்கையினை கூண்டுக்குள் போட்டு அடைத்து விட்டு தீரனின் எழுத்துகளோடு போர் புரிந்து கொண்டேன். அது ஓர் போரேதான். இல்லாவிட்டால் வெள்ளி விரலை வாசித்து முடித்த பின்ன்ர் மனசின் வெளிப் புற அங்கங்களில் ஆங்காங்கு காயங்க்ளும் மாயங்களும் எப்படி சாத்தியமெனக்கு.
தாய் மொழி, வதனமார், வெள்ளி விரல், விட்டு விடுதலையாகி, வேக்காடு, கலலடிப்பாலம், மீள் தகவு, கால வட்டம், தலைவர் வந்திருந்தார், நலலதொரு துரோகம், ஸீனத்தும்மா, மற்றும் சாகும் தலம் ஆகிய பன்னிரெண்டு சிறுகதைகளையும் வாசித்து முடித்த போது தீரன் ஒரு நல்ல கதை சொல்லி மட்டுமல்ல, அவர் வழமையான கதை சொல்லும் தளத்திலிருந்து பிரிந்து செல்லுகின்ற மாற்றுப்பாதைகளில் பயணிக்கின்றார் என்பதோடு, வாசகர்களையும் தன்னோடு கூடவே அழைத்துச் செல்லுகின்ற வசியத்தையும் செய்து முடிக்கின்றார் என்பது கிரிஸ்டல் கிளியர்.
எல்லாக் கதைகளிலும் பொதுவாக நான் அவதானித்த விடயம் தீரனின் கதைகளில் கதைக்கு மிக முக்கியம் என்று நான் கருதுகின்ற காட்சிப்படுத்தலை (VISUALIZATION) மிகைப்படுத்தல் இல்லாமல் (EXAGGERATION) தருகின்ற அவரது நடை கதைகளின் உள்ளே ஆழமாகச் சென்று ஊடாட வேண்டுமென்ற வேட்கையை மனசுக்குள் உருவாக்கி விட்டுச் செல்லுகின்றது.
இந்தத் தொகுதியின் முதல் கதையான “தாய் மொழி” சிறு கதையில் கதை நிகழும் தாய்லாந்தின் பெரு நகரத்து களியாட்ட விடுதியை அவர் விபரிக்கின்ற போது அந்த சூதாட்டக்காரர்களின் சொர்க்க பூமியின் கதவுகளுக்குள் பாஸ் வேர்ட செருகுகின்ற பரவசம் ஏற்படுகின்றது. பொதுவாகவே மிகைப்படுத்தாத காட்சிப்படுத்தல் வாசகனை எப்போதும் அந்தக் கதையினுள்ளே அவனது முன்னனுமதியில்லாமல் அழைத்துச் சென்று அமர வைத்து விடும். சுஜாதாவின் பெரும்பாலான கதைகளில் இதனை நாம் தரிசிக்கலாம்.
சுயலாபங்களுக்காகவும், தாம் அமர்ந்து கொண்டிருக்கின்ற நாற்காலிகளை பாதுகாத்துக் கொள்வும், ஈகோவின் படுக்கையறையினை ரத்தத்தால் எயார் ஸ்ப்ரே அடிக்கவும், நீண்டு கொண்டிருக்கின்ற போரினால் பிறந்த பூமியின் இருப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டு பிழைப்புக்காக அந்நிய தேசத்தில் குப்பையாக வந்து விழுகின்ற டயஸ்போராக்களின் மொழியின் வலியை சொல்லுகின்ற தாய் மொழி சிறு கதை ஒட்டு மொத்த டயஸ் போராக்களின் ஓலம்.
அந்நிய செலவாணி தேசத்தில் அவர்களின் மொழியை வயிற்றுக்காக தத்தெடுத்துக் கொண்டு வாழ்கின்ற காலத்தின் கட்டாயத்தில் சொந்த மொழி மறந்த டயஸ் போராக்களின் ஒட்டுமொத்த கணணீர் இந்த தாய் மொழி. இந்தக் கதையின் பல இடங்களில் தாயி மொழியை அதற்குரிய இடங்களில் பயன்படுத்தியிருக்கின்ற நௌஷாத்தின் முழுமையான ஈடுபாட்டில் கதை ஒரு மொடர்ன் ஓவியமாக விரிகின்றது. தாய்லாந்தின் இரவுச் சாலையின் நியான் விளக்கு வெளிச்ச்தில் நௌஷாதின் பயணம் நீளுகின்றது.
விட்டு விடுதலையாகி மற்றும் கால வட்டம் இரண்டு சிறுகதைகளும் மெஜிக் ரியலிச வரிசை. புனர் ஜென்மக் கற்பனையில் பாத்திரங்கள் புன்னகைக்கின்றன. இரண்டு சிறுகதைகளும் புனர் ஜென்ம (RE INCARNATION) நன் சயன்டிஃபிக் பிக்ஷன்கள். கால வட்டம் சிறுகதையை வாசித்த போது கே. வி. ஆனந்தின் இயக்கத்தில் வெளியான தனுஷின் “அநேகன்” படம் ஒரு பூனையைப் போல எனது தெருவை குறுக்கறுத்துப் போவதனை தடுக்க முடியாமற் போய் விட்டது.
இண்டு சிறுகதைகளும் வாசிப்பின் அடங்காப் பசிக்கு ஹோட்டல் சரவணபவனுக்கு அழைத்துச் செல்லுகின்றன. மாறு பட்ட களம்…வேறு பட்ட தளம். இலங்கையின் தமிழ்ச்சூழலில் இப்படிப்பட்ட கதைகளை எழுதப்படுவதில்லை என்பதனை விட எழுதுவதற்கான முயற்சிகள் கூட செய்ய்ப்படுவதில்லை என்பது ஃபெக்ட் டு ஃபெக்ட். வெல் டன் தீரன். ஆனால் விட்டு விடுதலையாகி கதையில் எனக்கு ஒரு முஸ்லிம் என்ற வகையில் அவ்வளவு உடன்பாடு கிடையாது என்பது எனது தனிப்பட்ட கருத்து தீரன். ஆனால் நமது தமிழ் இலக்கிய சூழலில் அரிதான முயற்சிகளை நீங்கள் செய்திருக்கின்றீர்கள். பரிசோதனை முயற்சிக்கதைகள். அதற்கே உங்களுக்கு ஒரு விஷேச ஹேட்ஸ் ஓஃப்.
இந்தத் தொகுதியின் இறுதிக்கதை “சாகும் தலம்” ஒரு சயன்ஸ் ஃபிக்ஷன் வரிசை. 2009ம் ஆண்டு எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ம்ம்பப் பிடித்த மறைந்த எழுத்தாளர் சுஜாதா ஞாபகார்த்த அறிவியல் புனை கதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை. சயன்ஸ் ஃபிக்ஷனா அப்டின்னா என்னவென்று நம்மையே பார்த்து கேட்கின்ற இலங்கையின் தமிழ் இலக்கிய சூழலில் தீரனின் இந்தக் கதை அவரது எழுத்தின் பன் முக வடிவத்தினைக் காட்டுகின்ற படைப்பு. பொதுவாக எனக்கு சயன்ஸ் ஃபிக்ஷன் ரொம்ப்ப பிடிக்கும். அதிலும் தமிழில் சுஜாதாவின் சயன்ஸ் ஃபிக்ஷன் சிறுகதைகள் நாவல்கள் எல்லாமே வாசித்திருக்கின்றேன். அதிலும் குறிப்பாக அவரது விஞ்ஞான புனை சிறு கதைகள் புளகாங்கிதமானவை. ஏரோநொட்டிக்கிலிருந்து ஸ்பேஸ் வரைக்கும், கம்பியூட்டர் மொனிட்டரிலிருந்து ரோபோட்டிக் வரைக்கும் ஆர்தர் சீ கிளாக் வேலை பார்ததிருப்பார் சுஜாதா.
தீரனின் சாகும் தலத்தின் ஆதார சுருதி காதல். ரொமான்டிக் ஹோமோன்சுகளின் விருமாண்டித்தனம். ஈஸ்ட்ரஜன் மற்றும் புரஜொஸ்ட்ரோன்களின் இளவேனிற் கொண்டாட்டம். ரோபோக்களுக்கு உணர்ச்சிகளை ப்ரோக்ரம் பண்ணியதன் விளைவாக உருவாகின்ற ரொமான்டிக் ரகசியங்களை மொடர்ன் சயன்சைக் கலந்து தீரன் ஷங்கரின் பார்ட் வன் எந்திரன் வேர்ஷனை படைத்திருக்கின்றார். ஃபிக்ஷன் என்றாலும் மனசுக்குள் அந்தக் கதைக்களமும் துஷ்யந்தனும் சகுந்தலையும் பயணம் செய்கின்ற கலமும் ஆறாயிரம் அடியல்ல அதுக்கும் மேலே நம்மை அழைத்துச் செல்லுகின்றது.
வெள்ளி விரல், வேக்காடு, கல்லடிப்பாலம், மீள்தகவு, தலைவர் வந்திருந்தார், ஸீனத்தும்மா ஆகிய ஆறு கதைகளும் மண்வாசம் பீய்ச்சியடிக்கின்ற புழுதிக்கதைகள். மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் பேச்சு வழக்கில் அன்றாட வாழ்வியலை மிக அழகாக பதிவு செய்துள்ளார். வெள்ளி விரல் சிறு கதை கொமடி கலந்த ட்ரஜெடி. முஸ்லிம் சமூகத்தில் ஜின் வைத்து வயிறு வளர்க்கும் ஜின்னோலஜிஸ்டுகளுக்கும், பேயோலஜிஸ்டுகளுக்கும், ஃபிசாஸியன்களுக்கும் என்று எப்போதுமே ஒரு இடம் இன்று வரைக்கும் இருந்து கொண்டுதானிருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் அவர்கள் ஒரு வகையில் முடி சூடா கிங்குகள். பேச்சு மொழியில தீரன் இந்தக் கதையை பதிவு செய்திப்பது அப்சலியூட் அழகு. பல இடங்களில் சிரித்து முடிவில் மௌனமாகி விட்டேன் பெட்டரி போன பொக்கட் ரேடியோவாய்.
வெள்ளி விரல் கொமடி என்றால் ஸீனத்துமமா பேர்ஃபெக்ட் ட்ரஜெடி. போர்க்கால பூமியில் முஸ்லிம் கிராமங்களில் சீர் திருத்தம் என்ற பெயரில் வாழ வழியற்று நாதியற்று நிற்கின்ற விளிம்பு நிலைப் பெண்கள் தாரை தப்பட்டையாக்கப்பட்ட துயரத்தை சமரசங்கள் எதுவுமில்லாமல் உள்ளதை உள்ள படி வெளியே கொண்டு வந்த தீரனை இந்த இடத்தில் எழுத்துக்கு துரோகம் செய்யாத பேனாக்கரனாக பார்க்கின்றேன். ஸீனத்தும்மா மீதான கலிமாச் சொன்ன ஆண் சமூகத்தின் பார்வை எப்போதும் சதை சார்ந்த அனுதாபமென்பதனையே அடிக்கோடிடுகின்றது இந்தக் கதை. ஸீனத்தும்மா எனைப் பெறாத உம்மா.
மீள்தகவு கதை டொப் ஃபைவ் என்று தரப்படுத்தினால் நிச்சயம் அதற்குள்ளிருக்கும். அருமையான கதை. அடிமட்ட மக்களைப் பொறுத்த் வரை அரச எந்திரம் எப்படி ஒரு பிசாசாக மாறி விடுகின்றது என்ற யதார்த்தத்தை ஒரு புதிய கோணத்தில் சொல்லியிருக்கின்றார் தீரன். போரில் அங்கவீனனான ஒரு சோனியின் அங்கவீனத் தொகையை வைத்து அவன் மீது தினம் தினம் போர் தொடுத்து அரச எந்திரத்தினால் அலைக்கழிக்கப்படுகின்ற பெருந்துயரத்தை பதிவு செய்துள்ளார்.
இந்தக் கதையில் தீரனை வேறு கோணத்தில் வாசகர்கள் பார்ப்பதற்கு அவர் எத்தனித்திருக்கின்றார். ஒரு பெரு வலியை அவர் புதிய உத்தியில் விதைத்திருக்கின்ற பாணியில் கதை முடிந்தும் முகம்மது யூசுப் அப்துல்லாவின் காணாமற் போன கை கன்னங்களில் அறைகின்றது.
வேக்காடு மற்றும் தலைவர் வந்திருந்தார்………இரண்டு சிறுகதைகளும் அஷ்ரப் உருவாக்கிய முஸ்லிம் காங்கிரஸ் அவரது அகால மரணத்துக்குப் பிறகு அப்பந்தட்டி கூழான கதையின் அக்மார்க் எக்ஸ்ரே ரிப்போர்ட்.
அஷ்ரபின் மரணத்துக்குப் பிந்திய முஸ்லிம் காங்கிரஸின் அரசியலையும்,கென்சர் ஷெல்களினால் தீரக்கமுடியா நோய்க்குள்ளான முஸ்லிம் தேச அரசியலையும் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்திருக்கின்ற இந்தக் கதைகளின் எழுத்து நடை இம்ப்ரெஸ் பண்ணுகின்ற அதே வெளை மனசாட்சிக்கு விரோதமில்லாதவாறு யதார்த்தத்தை உள்ளது உள்ளபடி தணிக்கை கத்திரிகளின் தகிடு தத்தம் ஏதுமின்றி தைரியமாக எழுதியிருக்கின்றார் தீரன். வேக்காடு உருவகத்தின் உச்சத்தில் ஃபோக் ஸ்டைலில் புனையப்பட்ட உண்மைகளின் புதையல்.
கிழக்கைச் சேர்ந்த இரண்டு (பெரும்பாலும் கல்முனை) பெண்களின் ஸ்லேங் லேங்குவேஜிலான (SLANG LANGUAGE) உரையாடல் மூலம் அஷ்ரபின் மௌத்துக்குப் பின்னர் கட்சியின் தலைமத்துவத்துக்காக நடந்த மல்யுத்தத்தை பதிவ செய்திருக்கின்ற ஸ்டைல் மெரசல்.
தலைவர் வந்திருந்தார் கதையும் அது மாதிரித்தான். இங்கு மர்ஹும் அஷ்ரபுக்கும் ஒரு முஸ்லிம் காங்கிரஸ் போராளிக்குமிடையிலான உரையாடல் மூலம் தீரன் ஒரு முழுப்பக்க ஃபைன்டிங் ரிப்போர்ட்டை கதை வடிவில் தந்திருக்கின்றார். “அப்படியானால் கட்டுக் கோப்பான நமது கட்சி எங்கே” என்று அஷ்ரப் கேட்கும் போது “அப்படியே கட்டிக் கோப்புக்குள் பத்திரமாக வெச்சிருக்கம் சேர்” என்று போராளி அஷ்ரபிடம் சொல்லும் போது தீரனின் கூர்மையான வசனங்களில் குருதியின் ஒரு துளி பிரமிளின் தீராத பக்கங்களில் குறிப்பெழுதிச் செல்லுகின்றன.
எனினும் வேக்காடு கதை முழுக்க முழுக்க அம்பாறை மாவட்ட ஸ்லேங்கில் அமைந்திருப்பதனால் கிழக்குக்கு வெளியேயான வாசகர்களுக்கு அவ்வப்போது கதையின் மொழி அவ்வப்போது மின் தடையை ஏற்படுத்துமென்று நினைக்கின்றேன் திக்குவல்ல கமாலின் பெருவாரியான சிறு கதைகளைப் போல. எனினும் தான் சார்ந்து வாழும் கரிசக்காட்டு பூமியின் மொழியைப் பயன்படுத்த வேண்டிய கட்டயாப் பொறுப்பு நலல கதைஞனுக்கு எப்போதுமே இருக்கின்றது.
தீரன் வெள்ளி விரல், வேக்காடு, கல்லடிப்பாலம், மீள்தகவு, தலைவர் வந்திருந்தார், ஸீனத்தும்மா கதைகளில் சொந்த பாஷையால் கதை சொல்லி வெற்றி கண்டிருக்கின்றார்.
நல்லதொரு துரோகம் இந்தத் தொகுதியில் என்னை இரண்டாம் முறை வாசிக்க வைத்த வசியக் கதை. போர்க்காலத்தில் குருதி சிந்தும் பூமியில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்தின் நிஸ்ஸங்க எனும் சிங்கள பொறுப்பதிகாரியையும், அய்யூப் எனும் முஸ்லிம் ஊர்காவற் பொடியனையும் சுற்றி நகர்கின்ற கதை. இந்தக் கதையை வாசித்து முடித்த போது பெரும்பான்மை ஓநாய்களின் கோர வெறியால் ஒடுக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தின் ஓலக்குரல் எனக்குள் ஒலித்துக் கொண்டேயிருந்தது. இந்தக் கதையில் எஸ்எல்ஆர் துப்பாக்கியால் சுட்டுப்பார்க்க வேண்டுமென்ற பெரும் லட்சியத்தோடு அலைகின்ற அய்யூப் தனது ஓஐஸியின் அந்தத் துப்பாகியால் அவரையே சுடுகின்ற போது ஒரு மானுடத்துக்கெிரான அரக்கப் போரில் அவன் தர்ம யுத்தம் செய்வது எப்படி துரோகமாகும் தீரன்.
அற்புதமான இந்தக் கதைக்கு நலல துரோகம் என்ற டைட்டில் அபத்தமாகத் தெரிகின்றது. ஏன் தீரன் அப்படி. அய்யூப் அவனது ஓஐஸிக்கு துரோகம் செயய்வில்லை. மாற்றமாக நுனியில் கொண்டு திரிகின்ற ஒரு இரண்டு கால் மிருகத்தை வதம் பண்ணி அந்த எஸ்எல்ஆருக்கு ஆத்ம திருப்தி கொடுத்திருக்கின்றான். இந்தக் கதைக்கு நலல துரோகம் என்ற பெயர் ஒட்டாமல் துருத்திக் கொண்டிருக்கின்றது.
கல்லடிப்பாலம் கதை அந்தப்பாலத்தின் பழைய வரலாற்றை மீட்டி ஒரே சம்பவம் கால மாற்றத்தில் வித்தியாசமான கிளைமேக்சுகளை சந்திக்கின்ற அனுபவத்தைத் தருகின்றது. அந்த வித்தியாசமான கிளைமேக்சுகளுக்கு காரணமாகவிருக்கின்ற அரசியல், சூழல், யதார்த்தத்தின் மீதான நம்பிக்கை, வாழ்வின் மீதான பிடிப்பும், அதனோடு மோதி வெடித்துச் சிதறுகின்ற அபாயத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான தற்காப்பபு நிலைகளும் என கதை சுழலுகின்றது.
வதனமார் சிறு கதை வன் ஒஃப் த வொன்டர்ஃபுல் இந்தத் தொகுதியில். தான் வளர்த்து காதலிசம் கொண்ட மாடுகளை கண்ணுக்குக் கண்ணாக நேசித்து வருகின்ற வேளை திடீரென காணாமற் போகும் போது ஏற்படுகின்ற மன உளைச்சலும், நிம்மதியற்ற தன்மையும் அவனை எந்தளவு தூரம் கொண்டு சென்று விடுகின்றரது என்பதனை மிக நேர்த்தியாக சொல்கின்றது இந்தக் கதை.
தான் வளர்த்து காதல் கொண்ட மாட்டுக்காக உசிரு விடுகின்றவனின் விறைத்த உடலை அந்த மாடு பெருந்துயரோடு நக்கிக் கொண்டிருக்கின்ற கடைசிக் கட்ட காட்சி இதயத் துடிப்பின் இறுதிக்க்ட்டம். நாடித்துடிப்பில் நில நடுக்கம். தீரனின் அற்புதமான நடையில் கதையின் போக்கு காடு மேடு என எல்லா இடங்களிலும் வாசகனை அலைக்கழித்து கூட்டிச் செல்லுகின்றது. அந்த இரவின் விருட்சத்தை தீரன் பேயாட்டம் ஆடுகின்ற போது மனசின் சுவர்களில் வௌவால்களின் வனவாசம்.
வெள்ளி விரல் சிறு கதைத் தொகுப்பு பன்னிரண்டு கதைகளடங்கிய ஆழ் கதைகளின் அல்பம். ஒவ்வொன்றும் வெவ்வேறு கோண்ஙகளில் வாசகனை தூக்கி விசிருகின்றது. ரசனைகளின் ரசவாதத்தில் கதை சொல்லும் உத்தியால் பாதரசம் தயாரிக்கின்ற தீரனின் இந்தத் தொகுதியை வாசித்து முடித்து விட்டு உறக்கத்துக்குச் சென்ற போது அடுத்த நாள் விடியும் வரைக்கும் வெள்ளி விரல், வேக்காடு, மீள்தகவு, தலைவர் வந்திருந்தார், ஸீனத்தும்மா, நல்லதொரு துரோகம் அனைத்தும் எனை துரத்திக் கொண்டேயிருந்தன.