Wednesday, March 20, 2019

பிஸ்தாமி அஹ்மத்

தீர்ந்து போகாத தாகத்தையும், தூர்ந்து போகாத நினைவுகளையும் தந்து விட்டு......




ஆபத்துக்குள்ளாகிப்போகும் யதார்த்தமான ஆயிரக்கணக்கான வாழ்வடையாளங்களை அதியற்புதமாக கதையாக ஆக்கி அதற்காக அபாயகரமாக போராட வைக்கின்ற பன்னிரண்டு கதைளின் இல்லை கதைக்களஞ்சிய கருவூலங்களின் தொகுப்பிது

இவருக்கு மொழி எங்கிருந்து ஊற்றெடுக்கின்றதோ தெரியாது
கருத்தரித்த தாய்க்கு சிசு மீது உற்பத்தியாகும் அலாதியான அன்பூற்றுபோல
இவரது கதைக்கு அவரது எங்கிருந்தோ மொழிச்சுணை ஒன்று ஊற்றெடுத்து பிரவாகித்தோடுகிறது பன்னிரண்டு கதைகளிலும்
தாய்லாந்து பக்கம் அப்படியே அழைத்துச்சென்ற தாய்மொழி தாய்மொழி மீதான தீரனின் தீராத காதலை தாகத்தை தவிப்பை தடயமாக்கி நகர்கிறது

இரத்தவெறிபிடித்தலையும் பேயாட்டத்தின் மர்மத்தை மயக்கம் நீக்கி விடுகிறது வதனமார்
காமலீலைகளுக்காக கதவடைத்து விடும் ஆசாமிகளின் சாரனை கலைத்து சாயம் வெளுக்கவைத்து சாதனை படைக்கிறது வெள்ளிவிரல் ஜன்னலோரத்தில் வெள்ளிவிரலை பருகியவாறுகிழக்குப்பயணம்வார இறுதியில்தூர பயணம் வாழ்வாகியே போனது... வாழ்த்துக்கள்


தீரனின் வெள்ளி விரல் குறித்து
2ம் கட்ட வாசிப்பு

தீரன் வாசகரின் தீராத எழுத்து தாகங்களை தன் கதைகளுக்கூடாக தீர்த்து வைப்பவர்.தீரன் குறித்து கொஞ்சமாக அறிந்துள்ளேன்.,ஆனால் எதனையும் வாசித்ததில்லை.கடந்த வாரங்களில் கிழக்கில் மேற்கொண்ட விஜயத்தில் எதேச்சையாக ஏறாவூர் sabry அவர்களை சந்தித்து சில புத்தகங்களை வாங்கினேன்.தீரனின் வெள்ளி விரலும் இருந்தது.வாசியுங்கள் என்று வாய்திறந்தார்.வாங்கினேன்.சுடச்சுட வாசித்தேன்.

கடந்து வரும் கல்லடி பாலம் குறித்தும் ஒரு கதை இருந்தததால் கூசாமல் பேசாமல் வாசித்தேன்.அருமையான கதை சொல்லி தீரன்.கல்லடி பாலத்தில் தவராஜா ருவைதா மற்றும் அஸார் டீன் மகேஸ்வரி நிழலாடியதாக நகர்ந்தேன்

கடந்த பதிவில் தாய் மொழி வதனமார் வெள்ளி விரல் குறித்து கொஞ்சமாக பேசினோம்.
இப்போது அடுத்த கதையான விட்டு விடுதலையாகி மற்றும் உள்ள கதைகள் குறித்து சில குறிப்புகள்....

விட்டு விடுதலையாகி......
ரொம்ப சுவாரசியமான கதை.நாசாவுக்கு சென்று நாசமாகாமல் நாசாவில் அதாவது நிகழ உள்ளவற்றை நாக்கூசாமல் நையப்புடைக்காமல் வாசிக்க வழியமைக்கிறார்.
சுவாரஷ்யம் நிறைந்த கதை

இங்கொன்றும் அங்கொன்றுமாக அங்கிங்கெனாதபடி கதையை கடத்தி பத்திரமாக கொண்டு செல்கிறார்.மிகவும் திரில்லாக திருப்பத்துடன் தித்திப்புடன் அடிக்கடி திடுக்கிட வைக்கும் அடுக்குமைகள் நிறைந்த விண்வெளிக்கதை போல காவியமாக கைதேர்ந்த மொழியில் கதையாக்கியுள்ளார்.சிறு வயதில் எப்போதும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன செய்திகளில் கொழும்பில் குண்டுவெடிப்பு 30 பேர் ஸ்தலத்தில் பலி.பலரும் படுகாயம்.கொழும்பு தேசிய ஆஸ்பத்திரி பணிப்பாளர் வைத்தியர் ஹெக்டர் வீரசிங்க ஏதாவது கூறியதை அலுப்ப தட்டாமல் கூறும் பழைய நினைவுக்கு கொண்டு சென்றது அந்த வெடிகுண்டுக்கதை.ஆனால் இங்கு மட்டுமின்றி இங்கும் அங்குமாக அது இருந்தது அந்த தலைநகர தற்கொலைத்தாக்குதல் குறித்த எழுதப்படாத சிறுகதை

அடுத்து வேக்காடு...
எல்லோர் வாழ்விலும் நிகழ்வது போல வாப்பா மரணித்தால் உம்மாவின் அழகுக்கும் சொத்துக்கும் ஆசைப்பட்டு அவசரமாக மறுமணம் முடித்து அடுத்தடுத்து காயடிக்கும் கழுதைகளின் கதை தான் இது.

வாப்பாவின் மரணத்தையடுத்து சக்கிம் சாச்சா படுத்திய பாடுகளை அப்படியே முன்வைக்கிறது.பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்றிருக்க சக்கிம் சச்சா மட்டும் என்ன விதி விலக்கா? விதியோடு அவர் விளையாடிய விபரீதமான விளையாட்டு தலைவர் அஷ்ரப் போல இருந்த அவர் முக்குலதம்மாவா மூமினும்மான்னு மாத்தினாலும் சக்கிம் சாச்சா பின்னாட்களில் வந்து உம்மாவை உறவாக்கி மறு தாரமாக்கி சொத்துக்களை சூறையாடி நியாயம் கெட்டுப்போன பிள்ளைகளையும் வீதியில வீசி நாக்க புடிங்கி நாலு கேள்வி கேட்ட துயர் மிகு கதை வேக்காடு.

அடுத்து...
கல்லடிப்பாலம்.
இப்போதெல்லாம் மட்டக்களப்பு கல்லடிப்பாலம் எனக்கும் நெருங்கி விட்டது இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை கடந்து செல்கிறேன்.தற்கொலை பாலம் என்று சிறப்பித்து சிலாகித்து கூறினாலும் அதன் வரலாற்று நீட்சியை தவராஜா மற்றும் ருவைதாவில் தொடங்கி அஸார்டீன் மகேஸ்வரி வரை கொண்டு வந்து வரலாற்று ஆசிரியனாகவும் நினைவுப்பெட்டகம் ஆகவும் சிறந்த கதை சொல்லியாகவும் மாறுகிறார். தீரன்.
கல்லடிப்பாலம் மிகவும் சுவையான வாரலாற்றுக்கதையாக திருவடிவம் பெறுகிறது இங்கு.

அடுத்து மீள்கதவு
காங்கையனோடை மட்டக்களப்பு யூசுப்யுத்தத்தில் கையை இழந்து தந்தையையும் இழந்து நட்ட ஈடு பெறத்துடிக்கும் அலைமோதல் உண்மையில் கண்ணீரை வரவைக்கும்.யூசுப் படும் பாடு தான் இன்று தமிழ் தெரியாமல் அரச திணைக்களங்களில் எல்லோரும் படும் பாடு அவலம் நிறைந்த வாழ்வில் அமைதியை விலை பேசி அவமானத்தை மட்டும் விலைக்கு வாங்கி அவதிப்படும் அன்றாடம் அவஸ்தைகளின் தொகுப்பு தான் மீள்கதவு.

அடுத்து காலவட்டம்
ஒரே நிகழ்வு எப்படி காலவோட்டத்தில் சுற்றிசுழன்று மரணமாக பரிணமிக்கிறது என்பதுதான் கதை....தீரன் கதை சொல்லி மட்டுமல்ல.தன கதைகளுக்கு வரலாற்றையும் அப்படியே கருவாக்கி கதையாக தருபவர் என்பதற்கு காலவட்டம் சிறந்த சான்று.ஆயிரம் வன்மங்கள் உள்ளத்தில் படிமங்களாக இருந்தாலும் மனசாட்சியின் ஈரம் யாருக்கும் உண்டு என்பதை வாரலாற்றுக்கூடாக மிக கவனமாக எடுத்து கையாள்கிறார்.வன்னி நிலத்தின் அடர்வனத்திலும் அது கடந்து ஒல்லாந்து நாட்டு வான்ச்டைமும் தபோவன முனிவரும் தேடி வந்த வள்ளால மன்னரின் வீரதளபதியும் மீண்டும் இங்கிலாந்து மக்மிலனும் அர்ச்சகரும் தேடி வந்த சிங்கார வன்னியனின் கிளர்ச்சிப்படை தளபதியும் அடுத்து இந்தியப்படை பகதூர்நாத்தும் ஐயரும் அவர்களை துரத்தி வந்த விடுதலைப்புலி வீரனும் கடைசியாக தளபதி மற்றும் கோயில் குரு கர்ச்சிக்கும் மின்னம்பலம் ..............மிகவும் விறுவிறுப்பான பயணம் இந்த காலவட்டம்..........

அடுத்து இடம்பெறும் தலைவர் வந்திருந்தார் கதை .......
இதனை அரசியல் வங்குரோத்து குறித்த உண்மைக்கதை என்றும் சுருக்கமாக சொல்லி விடலாம்.
முஸ்லிம் காங்கிரஸ் அதன் பக்த கோடிகளால் கூறுபோடப்பட்டு விலை பேசப்பட்டிருக்கும் அரசியல் வங்குரோத்து நிலையை வருத்தம் சகிதம் கூறுகிறது.அரசியலில் நிகழும் தலைமுறை மாற்றத்தின் போது எழுகின்ற சுயநலம் பரவிக்கொள்ளும் இருண்ட யுகத்தை கதை கூறிச்செல்கிறது.

அடுத்த கதை நல்லதொரு துரோகம்.........
கிட்டத்தட்ட மூன்றாம் கதையாகவும் புத்தகத்தின் தலைப்பாகவும் உள்ள வெள்ளி விரல் போலத்தான்.காமத்தை மறைத்து மறைத்து கக்கப்பார்க்கும் முகமூடிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதாக இதுவும் உள்ளது.ஆனால் அது மாந்திரீக சூழ.இதுவோ யுத்த சூழல்.அது புகை மூட்டி நிகழ இதுவோ பகை மூட்டி நிகழ்ந்து விடுகிறது
எஸ்.எல்.ஆர்.மூலம். அந்த கொடிய துரோகத்தை நிஸ்ஸங்க என்ற காவல் துறை புள்ளிக்கு செய்து முடிக்கிறார் அய்யூப்

வறுமைக்காக உடலை மலிவாக விலை பேசி விற்கும் மங்கை சீனதும்மாவின் சீர்கெட்ட வாழ்வை படம் பிடிப்பதாக உள்ளது கதை.ஆனாலும் தனது அடுத்த தலைமுறை நன்றாக வர வேண்டும் என்ற நப்பாசையும் நெஞ்சுக்குள் அடங்கி இருக்கிறது.ஆனாலும் நெறிப்படுத்தப்படாத இனந்தெரியாதவர்கள் சீனத்தின் வாழ்வையும் இனந்தெரியாமல் புதுமையாக புதைத்து கொன்றுவிடும் அபூர்வா படுகொலை இங்கு இறுதியில் நிகழ்கிறது.

துஸ்யந்தா சகுந்தலை விஸ்வாமித்திரர் வினோத கோலம் பூண்டு இருபத்தோராம் நூற்றாண்டின் விண் வெளியில் விபரீதமாக அலைந்து திரிந்து விநோதமாக சாவது தான் இந்த கடைசிக்கதை.சாகும் தலம்தீரனின் முதல் சிறுகதை நூல் என்னுள் தீரன் குறித்து இனி ஒரு போதும் தீர்ந்து போகாதா தாகத்தையும் தூர்ந்து போகாத நினைவுகளையும் தந்து விட்டு அமைதியாகிறது.

தீரனின் எழுத்துக்களை இனியும் அள்ளிப்பருகலாம்............
இது அவராக இதன் பிறகு இலவசமாக அனுப்பும் நூல்களில் கூட இருக்கலாம்.
ஆனாலும் தீரனை பருகுவே........ன் அழகு தமிழ் மொழிக்காக ........வாழ்க தீரன்..வாழ்க தமிழ்
bisthamy@gmail.com
20/3/2019

No comments:

Post a Comment