Wednesday, July 15, 2015

உள்ளடக்கங்கள்





2011இல் அரச தேசிய சாஹித்திய விருதையும் கிழக்கு மாகாண சாஹித்திய விருதையும் பெற்றது.

முதற் பதிப்பு -ஒக்டோபர் 2011

வெளியீடு -
காலச்சுவடு பப்ளிகேஷன் (பி)லிட் 669 கே பி சாலை நாகர்கோவில் தமிழ்நாடு

பக்கங்கள் 186

பிரிண்ட்- பிரிண்ட் ஸ்பெசலிஸ்ட் - சென்னை

சமர்ப்பனம்
1992 இல் சாய்ந்தமருது பொதுச் சந்தையில் குண்டு வெடிப்பில் பலியான 31 அப்பாவி மனிதர்களுக்கு

முன்னுரை
அல்ஹாஜ் எம் ரீ எம் நிஸாம் -
மாகாண கல்விப் பணிப்பாளர் கிழக்கு மாகாணம் திருகோணமலை

விலை - இந்திய ரூபாய் 100

அட்டைப்படம் - ரஷ்மி

உள்ளடக்கம் --- 12 சிறுகதைகள்

தாய்.மொழி.
வதனமார்
வெள்ளிவிரல்
விட்டு விடுதலையாகி
வேக்காடு
கல்லடிப் பாலம்
மீள் தகவு
காலவட்டம்
தலைவர் வந்திருந்தார்
நல்லதொரு துரோகம்
சீனத்தும்மா
சாகும் தலம்

பின்னட்டை குறிப்பு


இந்தக் கதைகளின் களம் - ஈழம் தாய்லாந்து விண்வெளி காலம் நேற்று இன்று நாளையையும் கடந்த முடிவற்ற காலம் ...இடமும் பொழுதும் வெவ்வேறானாலும் மனிதர்கள் தமது இருப்புக்காகவும் அடையாளத்துக் காகவும் போராடுகிறார்கள் அடையாளங்கள் சில சமயம் வாழ்வை ஆபத்துக்குள்ளாக்குகின்றன.. வாழ்வடையாளத்துக்காகப் பல சமயம் அபாயகரமாகப் போராட நேர்கிறது ..இந்த மானுடச் சிக்கலை முன் வைப்பவை இந்தக் கதைகள்

சு .ரா. நினைவு குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற நட்டுமையின் ஆசிரியர் நவ்சாத்தின் பன்னிரண்டு கதைகள் கொண்ட தொகுப்பு இந்நூல்


000

என்னுரை

 

சிறுகதைகள் பற்றிய ஒரு சிறு- கதை

 

யுத்தமே என்னை எழுதத் தூண்டிற்று.  முப்பது வருட காலம் முழுவதும்  நான் முப்பது வருட சேவைக்காலமுள்ள  அரச ஊழியனாகவே இருந்தேன்.  இக்காலகட்டத்தில் யுத்த அரசியல் செய்து கொண்டிருந்தவர்களினதும், அரசியல் யுத்தம் செய்து கொண்டிருந்தவர்களினதும்  யுத்தமும் செய்யாமல், அரசியலும் செய்யாமல்  அப்பாவித் தனமாக அலைந்து கொண்டிருந்தவர்களினதும்  நடத்தைக் கோலங்களைக் கண்டு  மனம் பேதலித்த நிலையில்  உளநோயின் விளிம்பில் நிற்கும்  ஒரு மனிதன் என்ன செய்யலாம் ? ஒன்றில் தற்கொலை செய்யலாம்.  அல்லது ஏதேனும் எழுதலாம்.  நான் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தேன்.

 

தேர்வு என்னவோ நல்லதுதான்.  ஆயின், எழுதுவதிலுள்ள சிரமங்கள், தேடல்கள்,  வழிகளைத் தாங்குவதை விட  மிகச் சுலபமாக உயிரை  மாய்த்திருக்கலாமோ என்று தோணும்.  ஏனெனில், யுத்த அரசியல் செய்து கொண்டிருந்தவர்களினதும்,  அரசியல் யுத்தம் செய்து கொண்டிருந்தவர்களினதும்,  யுத்தமும் செய்யாமல், அரசியலும் செய்யாமல்  அப்பாவித் தனமாக அலைந்து கொண்டிருந்தவர்களினதும்  தனிப்பட்ட பாத்திரங்கள் படைப்புவெளிச் சஞ்சாரத்தில்  வார்க்கப்படுகையில்  உருவாகும் பிரச்சினைகள்  பலவகையின.  பாத்திர வார்ப்பு  படைப்பாளியின் நோக்கு நிலை,  கதைக்கரு,  படைப்பு மொழி, இயங்குதளம்,  தனித்துவ நடை  புதுமையான உத்தி, முடிவு  என்று கதையின்  ஒவ்வொரு நிலையுமே  தரும்வேதனைகள் சொல்லிமாளா.  ஒரு கதையை எழுத  ஓராண்டுகாலம் பிடிக்கும்  போலிருக்கும்.  ஆனால் எதோ ஒரு கணத்தில்  பளிச்சிட்ட உள் ஒளியில்  ஒரே மணித் துளியில்  ஒரு கதையை எழுதி விடவும் முடிகிறது.

 

நான் சிறுகதைகள் குறைவாகத்தான் எழுதியிருக்கிறேன். (நான் எழுதிய நாவல்கள் என் நாள்களை விழுங்கிவிட்டன) எழுதிய சுமார்  25 சிறு கதைகளில்  ஏறக்குறைய பத்தொன்பது கதைகள்  பல்வேறு இலக்கியப் போட்டிகளில்  பரிசுகள் பெற்றுள்ளன.  அவற்றிலிருந்து  பரிசுபெற்ற 11  கதைகளையும்  பரிசு நிராகரிக்கப்பட்ட  ஒரு கதையையும்  இத்தொகுதியில் வாசிக்கப் போகிற  உங்களுக்கு கட்டாயமாக  ஒரு உண்மையைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

 

அதாவது எனது கதைகளை  பரிசுக்காகத் தேர்ந்தெடுத்த  நடுவர்களின் முகமோ, முகவரியோ இதுவரைக்கும்  எனக்குத் தெரியாது.  பெயரில்லாத கைப்பிரதியை வாசித்து  முகமறியா ஒரு படைப்பாளிக்கு  பரிசு கொடுத்திருக்கின்றனர்.  இது நேர்மையான ஒரு விடயமே. இதனையே,

 

....மண்ணின் மடியுள் மறைவாய் வாழ்ந்திருந்தாய்

பாதாள அக்கினியுள் பக்குவங்கள் பெற்றாய்

உள்ளொளியைப பெற்றே  உலகைத் தரிசிக்கும்

ஒரு வாழ்வை விரும்பித் தவமிருந்தாய்

இம்மனிதர், ஆழத்தில், இருளில்

உன்னை அடையாளம் கண்டார்கள்

மெத்த வருந்தி மண்மண்டலங்கள் கடந்து

கண்டெடுத்து நுட்பமாய் பட்டை தீட்டி

நூதனமாய்  ரசிக்கின்றார்.....’’

 

என்று பாடிய  பாவலர் பஸில் காரியப்பரின்  பா வரிகளை  இவ்விடத்தில் ஞாபகம் கொள்கின்றேன்.

            2௦௦9 இல்  சுந்தர ராமசாமி இலக்கியப் போட்டியில்  நாவல்துறையில்  முதற்பரிசு பெற்ற  எனதுநட்டுமை நாவலை  வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகமே  இச்சிறுகதைத் தொகுப்பையும் வெளியிடுகிறது. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

 

மேலும் மாகாண கல்விப் பணிப்பாளர்  அல்ஹாஜ்.  எம்.ரீ.. நிஸாம்  அவர்கள், கணணி வள நிலைய முதல்வர்  அல்ஹாஜ் அஸ்மி காரியப்பர் அவர்கள்  ஓய்வுநிலை அத்தியட்சகர்  சேயன் முகம்மது இபுறாகீம் (கடைய நல்லூர்) அவர்கள்,  பன்னூலாசிரியர்  ஹாதிபுல் ஹுதா எம்.எம்.எம். நூறுல்ஹக்  அவர்கள்,  றஷ்மி அவர்கள், ஷாலினி அவர்கள்  ஆகியோருக்கும  எனது விஷேட நன்றிகள் .

 

ஆர்.எம். நௌஷாத்

அஞ்சல் அலுவலகம்

சாய்ந்தமருது

இலங்கை.

 

 

முன்னுரை


அல்ஹாஜ் எம் ரீ எம் நிஸாம் -
மாகாண கல்விப் பணிப்பாளர் கிழக்கு மாகாணம் திருகோணமலை

 

           

சிறுகதைகள் ஏன் படைக்கப்படுகின்றன என்பதற்கு இதுவரையில் யாரும் திருப்திகரமான பதில் அளிக்கவில்லை.  ஆயினும் உலகில் பற்பல மொழிகளிலும் சிறுகதைகள் படைக்கப்பட்டுக் கொண்டுதானிருக்கின்றன.

 

பெருகிய வெளிப்பாட்டுணர்வின் இறுகிய வடிவம்  சிறுகதையாகிறது என்றும்,  சிறுகதை படைப்பது  என்பது ஒரு தவம்  அல்லது அது ஒரு அருள்  என்றெல்லாம் கூறப்படுகின்றன.  அது ஒரு படைப்பு என்ற வகையில்  அதனைப் படைப்பவன் இறைமையை உணர்கின்றான் என்றும்  அது ஒரு பிரசவம் என்பதால்  பிரசவிப்பவன் தாய்மையை  அனுபவிக்கின்றான் என்றும் கருதப்படுகின்றன.  இத்தகைய கருதுகோள்களுக்கு மத்தியில்  காலத்தை வென்று வாழும் படைப்புக்கள் யாராலும் திட்டமிடப்படாமலே  உருவாகின்றன.  அவை தாமாகவே  உருவாகி  எவர் மூலமாகவேனும்  வெளிப்பட்டு விடுகின்றன.

இந்நூலாசிரியரான தீரன் ஆர்.எம். நௌஷாத், தென்கிழக்கிலங்கையின் ஒரு பாரம்பரியக் கிராமமான  சாய்ந்தமருதில் பிறந்தவர்.  இலங்கை அஞ்சல் திணைக்களத்தில்  பொறுப்புத் தபாலதிபராக கடமை செய்பவர்.  தவிரவும் தான் வாழும்  சமூகக் கட்டமைப்பின் கூறுகள் மீதான  தீவிரமான உணர்வுகளையுடைய  ஒரு படைப்பாளியும்,  ஒரு வித்தியாசமான  கதைசொல்லியும் ஆவார்.  அவர் தன் கதைகளுக்குப் போர்த்தியுள்ள  ஒருமாயநடையும்  தன் கதைகளில் கையாண்டுள்ள  நவீன உத்திகளும்  தேர்ந்தெடுத்த வித்தியாசமான  கதைக்களங்களும்  பட்டவர்த்தனமான உரையாடல் மொழிகளும்  நம்மை அவரது கதைகளோடு  மிகவும் ஒன்றிக்கச் செய்துவிடுகின்றன.  ‘’வாசகர்களில் தன் உணர்வுகளைத் தொற்றுவிக்கும் இந்த வெற்றி  எழுத்தாளர்களுக்கு இலகுவில் கிட்டுவதில்லை.  இதனை இவர் சிறப்பாகக் கையாண்டுள்ளார்  என்பது என் அபிப்பிராயம் ஆகும் ...’’ என்று எழுத்தாளர்  உமா வரதராஜன்  இவரைப்பற்றிக் கூறியிருப்பது  மிகப் பொருத்தமானதாகும்.

 

உலகத் தமிழ் சிறுகதை என்ற விரிந்த மா கடலில்  ஆர்.எம். நௌஷாத்தின்  நவீன உத்திகள் கொண்ட  இச்சிறுகதைகள்  கிழக்கிலங்கையின்  சில முஸ்லிம் எழுத்தாளர்கள்  வழமையாகஎழுதி வரும்  ஒரு வகையான பாரம்பரியம் மீறாத  கதைக்கட்டுமானத்தை  கட்டுடைத்து  வித்தியாசமான எழுத்துப் பேரலைகளாக உருவெடுத்து  ஓர் ஆவேஷ சுனாமியாகப் பாய்ந்திருக்கின்றன.

 

            பல்வேறு இலக்கியப் போட்டிகளில் பரிசுகள் பெற்றவையான இவரது இந்த  பன்னிரண்டு கதைகள்  தொகுக்கப்பட்டு  வெள்ளி விரல்  என்னும் தலைப்பில்  தமிழ்நாடுகாலச்சுவடு பதிப்பகத்தினரால்  வெளியிடப்படுகின்றது. ஏற்கனவே, 2008 இல் தமிழ்நாட்டில்  சுந்தர ராமசாமி 75 ‘  நாவல் போட்டியில்  முதற்பரிசு பெற்ற  இவரது  நட்டுமை நாவலைத் தவிர்த்து  கிழக்கில் ஒரு  நாவல் வரலாற்றை  யாராலும் எழுத முடியாதது போலவே  இப்போதும்,  வெள்ளி விரல் என்ற  இச்சிறுகதைத் தொகுதியைத் தவிர்த்து விட்டு  சிறுகதை வரலாற்றை  ஒரு ஆய்வாளரால்  எழுதமுடியாது  என்பதை இச்சிறுகதைகளை வாசிக்கும் போது  வாசகரால் புரிந்து கொள்ள முடியும்.  இந்த வெற்றியே  இவரது எழுத்துகளின்  தீர்க்கமான அங்கீகாரம். நூலாசிரியருக்கு  எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

 

 

அல்ஹாஜ். எம்.ரீ.எம். நிஸாம்

மாகாணக் கல்விப் பணிப்பாளர்

கிழக்கு மாகாணம்

இலங்கை.

2011.08.01.


No comments:

Post a Comment