-செங்கதிர்--ஏப்ரல் 2012-- திறன் நோக்கு - வெள்ளி விரல்
ஒரு கதை முடிவடையும்போது அதைப் பற்றிய சிந்தனை முடிவடைந்து விடுவதில்லை. கதை முடிந்த பிறகுதான் ஆரம்பமாகின்றது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றது இந்த ‘வெள்ளி விரல்’.
இரண்டாம் விஸ்வாமித்திரன்
இருபது வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த சிறுகதைத் தொகுதியொன்றை அண்மையில் வாசித்தபோது அதில் பிரசுரிக்கப்பட்டிருந்த குறிப்பில் “தமிழில் வெளிவந்துள்ள பல நூறு சிறுகதைத் தொகுதிகளுள் ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது ஒரு கதையாவது ஏதாவது ஒரு வகையில் சிறப்புடையதாகவே இருக்கிறது.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நமது எதிர்பார்ப்பிலும் அதிகமாக சிறுகதைகளும் அவற்றைத் தாங்கி தொகுதிகளும் வெளிவந்து கொண்டிருக்கும் இன்றையநிலையில் பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவுமொன்று எனும்பாங்கில்தான் பல சிறுகதைத் தொகுதிகள் வந்து விழுகின்றன.
இந்தச் சு10ழ்நிலையில்தான் ஆர்.எம்.நௌஸாத் அவர்களின் ‘வெள்ளி விரல்’ சிறுகதைத் தொகுதியை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ‘வெள்ளிவிரல்’ முற்றிலும் வேறுபட்டதான ஒரு சிறுகதைக் கோவையாகக் கனிந்துள்ளது. . நமக்குப் பழக்கப்பட்டுப்போன சு10ழலோடு மட்டும் நின்று விடாமல் தாய்நாடு என்றும் தாய்லாந்து என்றும் ஏகாந்த வெற்றிடமென்றும் விசாலமான விண்வெளி என்றும் கதைக்குக் கதை வௌ;வேறு களம் நம்மையெல்லாம் ஆச்சரியப்படுத்துகின்றது. காலச்சுவடு பதிப்பகம் பன்னிரெண்டு கதைகளை ஒருசேரத் தொகுத்து இதனை வெளியிட்டுள்ளது.
சிறிது நேரத்துக்கேனும் கவனம் முழுவதையும் ஈர்த்துப் பிடித்து வாசகனின் மனம் விரும்பும் கலைநயம்கொண்ட கதைகளின் ஊடாக செய்தியொன்றை வழங்குவதுதானே சிறுகதைக்குச் சிறப்பு. அந்தவகையில்; தமிழ்ப் புனைகதையுலகில் சிறுகதையின் வெற்றியின்மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையை ‘வெள்ளி விரல்’ வென்றுள்ளதா என்பது பற்றிய தரிசனமாக இந்த விமர்சனம் அமைகின்றது.
(02)
கவிதைஇ சிறுகதை (நகைச்சுவைக்) கட்டுரை\ நாடகம் நாவல் எனப் பல்துறையிலும் நாட்டம் கொண்டவர் என்பதுடன் அவற்றில் பரிசில்களும் வென்றவர். இதுவரை எழுதிய சுமார் இருபத்தைந்து சிறுகதைகளில் பத்தொன்பது கதைகள் பல்வேறு இலக்கியப் போட்டிகளில் பரிசில்கள் பெற்றுள்ளன. பரிசுபெற்ற எட்டுக் கதைகளுடன்‘வல்லமை தாராயோ’ என்ற சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே 2000 ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது. 2008 இல் தமிழ்நாட்டில் ‘சுந்தர ராமசாமி 75’ நாவல் போட்டியில் இவரது ‘நட்டுமை’ என்ற நாவல் முதற் பரிசினை வென்றது.
(03)
தமிழ் இலக்கிய உலகத்தினரால் நன்கு அறியப்பட்டு வருகின்ற புலம்பெயர் எழுத்தாளரான ஷோபாசக்தி அவர்கள் ‘வல்லினம்’ என்ற இணைய இதழில் கேள்வியொன்றிற்குப் பதிலளிக்கும்போது தனக்குப் பிடித்த ஈழத்தின் முதல் பத்து நாவல்களில் நட்டுமையும் ஒன்றெனக் குறிப்பிட்டிருந்தார். இது மற்றொரு காரணம்.
நூலாசிரியர் என்ற வகையில் முகவுரையில் சிறுகதைகள் பற்றிய ஒரு சிறுஇ கதை என்ற தலைப்பில் தன் உணர்வுகளைப் பதிவு செய்திருந்தார். அதில் எழுதுவதிலுள்ள சிரமங்கள்இ தேடல்கள்இ வலிகள்இ கதைகளின் ஒவ்வொரு நிலையும் தரும் வேதனைகள் சொல்லி மாளா என்றும் ஒரு கதையை எழுத ஓராண்டு காலம் பிடிக்கும்போலிருக்கும் என்றெல்லாம் குறிப்பிட்டதிலிருந்து நல்ல கதைகளையே இத் தொகுதியில் தந்திருப்பார் என்பது பிறிதொரு காரணம். இப்படியான நம்பிக்கைகளுடன் தொகுதியை வாசித்து முடித்தேன். ‘தாய்.மொழி’ ‘மீள்தகவு’ ‘வேக்காடு’ என்பன மிக நல்ல கதைகள்.
தாய்.மொழி என்பது தொகுதியின் முதற் கதையாகும். இலங்கையைச் சேர்ந்த அரசரத்தினம் தாமோதரநாதன் என்ற இக்கதையின் நாயகன் (தாமோங் என்பது சுருக்கப் பெயர்) தாய்லாந்தில் ஒரு இரவுக் களியாட்ட விடுதியில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான். அப்போது ஹோட்டல் அறையொன்றிலிருந்து குற்றச்சாட்டொன்றின்பேரில் தாக்குதலுக்குள்ளாகி அடி தாங்க முடியாமல் ஒருவன் “என்ர அம்மோவ் என்ர கடவுளே” என்று அலறுவதைக் கேட்டு அதிர்ந்து போகிறான் தாமோங். எத்தனையோ வருடங்களின் பின் இந்த மொழியை –தாய் மொழியை - தமிழ்மொழியைக் கேட்கிறான். தனது தாய்மொழிமீது கொண்ட பற்றுதலுக்காக கதவைத் திறந்து அவனை இரகசியமாக ஓட விடுகிறான் என்று கதை முடிகின்றது. பகலில் பயில் மொழியாகவும் இரவில் இல்லத்து மொழியாகவும் பயன்படுத்திவிட்டு ‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’ என்று கோசம் போடுபவர்களை எட்டி உதைக்கிறது இந்தக் கதை.
‘மீள்தகவு’ என்பதும் சிறப்பான மற்றுமொரு கதை. இனக்கலவரமொன்றில் தனது ஒரு கையை இழந்ததால் அரசாங்கத்திடமிருந்து உதவுதொகை ஒன்றைப் பெற்றுக் கொள்வதில் ஒருவன் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றிய கதை. காரியாலயங்கள் ஒவ்வொன்றாக ஏறி இறங்கும் அவல நிலையைத் தத்ரூபமாகச் சித்தரிக்கின்றது. அரசு இயந்திரத்தின் அசமந்தம் இங்கே படம் பிடிக்கப்படுகின்றது. உருவம் இஉள்ளடக்கமஇ; உத்தி இபடைப்புமொழி என எல்லாவகையிலும் நல்ல கதை.
‘வேக்காடு’ பிறிதொரு நல்ல கதை. தமிழிலக்கிய உலகின் இமயம் எஸ்.பொன்னுத்துரை 1990களின் முற்கூறில் ‘வீ’ என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டிருந்தார். அத்தொகுதியில் உள்ள ‘அணி’ என்ற கதையை இங்கு நினைவு படுத்தவேண்டியுள்ளது. இக்கதையில் கதைசொல்லும் புதிய உத்தியொன்றை அறிமுகம் செய்திருந்தார். அதாவது முன்னே ஒருவனை நிறுத்தித் தானே பேசுவதாக அக்கதையை வடிவமைத்திருந்தார்.ஒரேயொரு பாத்திரத்தின் பேச்சுத் தவிர வேறு சொற்கள் எதுவும் வராமல் எழுதும் இம்முறை சிரமமானது மட்டுமல்ல அப்போது தமிழிற்குப் புதிதாகவும் அமைந்திருந்தது.
ஆர்.எம்.நௌஸாத்தின் ‘வேக்காடு’ என்ற கதையிலும் இதே உத்தி கையாளப்பட்டிருக்கின்றது. நடுத்தர வயதுப் பெண்ணொருத்தி தனது மச்சி ( மச்சாள் ) முறையானவளை தனக்கு முன்னால் வைத்துக் கொண்டு மரணித்துப்போன தனது தந்தையின் சமூக ஆளுமையைச் சொல்லுகின்றாள். கதை முழுவதும் மருதநில மண்வாசனை மணக்கிறது. இவ்வாறானவற்றோடு இன்னும் பல கதைகளும் பாராட்டத் தக்கவையாக உள்ளன.
தொகுதியின் முன்னுரையில் முதலாவது வசனமாக “யுத்தமே என்னை எழுதத் தூண்டிற்று” என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கும் கதையாசிரியர் யுத்தத்தின் காரணமாக நிமிடத்திற்கு நிமிடம் மரணத்தைக் எதிர்பார்த்துக் காத்துக்கிடந்த துன்பியல் வாழ்வையும் மற்றும் யுத்தத்தின் கோரமுகத்தையும் இந்தக் கதைகளில் பட்டும் படாமல் தொட்டுச் சென்ற அதேவேளை அதனை ஈடு செய்தது ‘விட்டு விடுதலையாகி’ என்ற கதை. .
‘விட்டு விடுதலையாகி’ என்பது தற்கொலைக் குண்டுதாரி ஒருவனின் கதை. வெடிப்பதற்கு ஒரு மணித்தியாலம் முன்னதாக சிறுகதையொன்றை எழுத ஆரம்பிக்கின்றான். எழுதி முடிய முன்னரே உரிய நேரம் வந்து விட்டதால் குண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொள்கிறான். இந்தக் கதையில் குண்டுவெடிப்பின் காரணமாக தலைநகரின் அசைவியக்கம் படம்பிடிக்கப்பட்டு அதன் நேர்முக வர்ணனை இறந்தகால எழுத்தாகிக் கதையாகி வந்து விழுந்துள்ளது.
பன்னிரெண்டு கதைகளில் ‘சாகும் தலம்’ என்பது கடைசிக் கதை.. இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகளின் பின்னர் அதாவது 10.12.3998 இல் நடைபெறும் என்பதான கற்பனையில் சொல்லப்பட்ட அறிவியல் புனைகதை. அய்ம்பதிலும் கூடிய வயதினரை உயிரழிப்புச் செய்யும் அரசாங்கத்தின் செயற்திட்டம் பற்றிய இரண்டு ரோபோக்களின் கதை. இந்தக் கதை இருபதாம் நூற்றாண்டில் பிரபல்யம் அடைந்த இருப்பியல்வாதத்தினையும் ;(நுஒளைவநவெயைடளைஅ) இதன் முன்னோடியான தஸ்தயேவ்ஸ்கி என்ற ஒரு படைப்பாளியையும் ஞாபகமூட்டியது.
“முட்டாள்களும் போக்கிரிகளும்தான் அவ்வாறு வாழ்கிறார்கள். நாற்பது ஆண்டுகளுக்கு மேல் மனிதன் இவ்வுலகில் வாழ்வதென்பது அபத்தம்”; என தஸ்தயேவ்ஸ்கி கூறுகின்றார். சனத்தொகை அடிப்படையில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் இன்றைய சு10ழ்நிலையில் இருப்பியல்வாதத்திற்கு ஒரு எதிர்காலம் உண்டென்பதற்கு மாற்றமாக ரோபோக்களை தற்கொலை செய்யச் செய்து அரசாங்கத்தின் செயற்திட்டத்தை தோல்வியாக்கி கதையை புதிய உத்தியுடன் முடித்திருக்கிறார்.
‘காலவட்டம்’ என்ற கதையில் தமிழ் அரசியல் கொஞ்சம் எட்டிப்பார்க்கின்றது. அவ்வாறே ‘தலைவர் வந்திருந்தார்’ என்ற கதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உள்வீட்டுப் பிரச்சினைகள் பற்றிப் பேசுகின்றது.. எல்லாக் கதைகளுமே பரிசு பெற்ற கதைகளாயிருக்க ;தலைவர் வந்தார்’ மட்டும் பரிசு பெறாத கதை. பரிசு கிடைக்குமென்று நம்பியிருந்தநிலையில் அது கிடைக்காமல்போனதால் ஏற்பட்ட ‘வெப்பிசாரத்தை’ மறைக்கும் எத்தனமாக ‘தலைவர் வந்திருந்தார்’ என்ற கதைக்கு நிராகரிக்கப்பட்ட கதை என்று பிற்குறிப்புப் போட்டு கலகலப்பூட்டுகிறார். பரிசு கிடைப்பதென்பது பல்வேறு கூத்துகளின் அரங்கேற்றம்தானே தவிர தர நிர்ணயிப்புத் தராசுத் தட்டல்ல என்பதுதான் உண்மை.
(04)
‘கல்லடிப் பாலம்’ என்ற கதை வித்தியாசமானது “இறைவன் தந்த உயிரைப் பறிக்கும் உரிமை எவருக்கும் இல்லை” என்று ‘ஸீனத்தும்மா’ என்ற கதையில் சொல்லி விட்டு ‘நல்லதொரு துரோகம்’என்ற கதையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் உயிரைப்பறிப்பது மட்டும் எப்படி நியாயமாகும்.?தொலைந்துபோன பொருளைக் கண்டுபிடிக்க ‘வதனமார்’ என்ற கதையில் ஆனைச்சித்தனையும் பாலுறவுச் சிக்கலைத் தீர்க்க ‘வெள்ளிவிரல்’ கதையில் வெள்ளிப் பரிகாரியையும் கதாநாயகர்களாக ஆக்கியதன்மூலம் மூடக் கொள்கைகளுக்கு விளம்பரமாகியுள்ளன இந்தக் கதைகள்.
‘ஸீனத்தும்மா” வின் கிராமியச் சூழலானது கதையின் பலமாக இருக்க அளவுக்கு மீறிய பேச்சுமொழிச் சொற்களால் கதை பலவீனமாகியது சிங்களம் இ அரபு இ ஆங்கிலம் என்று வேற்று மொழிச் சொற்கள் கொஞ்சம் கூடுதலாகவே இடம் பிடித்தமை போன்ற சரிவுகளுக்கும் அப்பால் படைப்பு மொழியும் ‘ஆனைச்சித்தன்’ (வதனமார்) மற்றும் ‘சலுகாக் கிழவி’ ( வெள்ளி விரல்) ஆகிய சில பாத்திரங்களின் வார்ப்புகளும் சிலாகிக்கத் தக்கது...
கதை முடிவடையும்போது அதைப் பற்றிய சிந்தனை முடிவடைந்து விடுவதில்லை. கதைகள் முடிந்த பிறகுதான் ஆரம்பமாகின்றன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றது இந்த ‘வெள்ளி விரல்’.
செங்கதிர் ஏப்ரல் 2012--