தாய்.மொழி.
தாய்லாந்து..! கிழக்காசியாவிலேயே பிரித்;தானியப் படைகளால் ஒரு போதும் ஆளப்படாத ஒரேயொரு நாடு.! தாய்லாந்தின் தலைநகரம் பாங்கொக்கிலிருந்து முன்னூறு கிலோ மீற்றர் தூரம்ää அதன் ‘கூவன்கோவ்’ மாநிலத்திற்கு பறந்து அல்லது விரைந்து வாருங்கள். உங்களை வரவேற்கிறது ‘ஹொங்க்லா’! இரவுக்களியாட்ட விடுதிகளின் மாநகரம்.! சூதாட்டக்கிடங்குகளின் சொர்க்க பூமி. பகலில் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கிää இரவில் விழித்திருக்கும் மின்மினி நகரம்.
‘ஹோங்க்லா’வின் நெருக்கமான சீமெந்துக் கட்டிட மரங்களிடையே படு சுத்தமான கார்ப்பட் தெருக்களில் வழுக்கும் பன்னாட்டுக் கார்கள்.. பாதாள ரயில்த் தொடர்.. பளீரிடும் நியோன் விளக்குகளின் வர்ணஜால ஒளிவெள்ளத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கும் பந்தயத் திடல்கள்.. பற்பல நட்சத்திரங்கள் மார்பில் சூடிய ஹோட்டல்கள்.. உல்லாசபுரிக்கான சிவப்புத் தெருக்கள்.. இலட்சக்கணக்கில் மனிதர்கள்.. மனிதர்கள்.. மனிதர்களிடையே ஒருவனாக நான்ää தாமோங்..! தாய்யீக்காரனல்லன். அசல் இலங்கைத் தமிழன். அரசரத்தினம் தாமோதரநாதன். என்ற நீளப் பெயர் இங்கு தாய்யி(லாந்து) மொழி உச்சரிப்பு வசதிக்காக “தாமோங்.!” அப்படித்தான் என்னை அழைக்கிறார்கள். ஊர் கோவில்பற்று. வயது முப்பது. புலம் பெயர்ந்து வந்த கதைகள் ஏராளமாக பின்னணியில் உள்ளன. ஆனால்ää அதல்ல நான் இப்போது சொல்ல வந்தது.
நீண்டுயர்ந்த தென்னைமரங்களை புற்களாகக் கருதிக் குனிந்து பார்க்கும் ஊசிக்கட்டிடங்களின் அடுக்குகளிடையே தனிக் கம்பீரமாக மூன்று ஏக்கர் பரப்பில் விரிந்திருக்கும் இரவுக்களியாட்டரங்கு ‘சாயுங்’! ஆறாயிரத்து நூறு ஊழியர்கள் பணி செய்யம் இந்தக் களியாட்டரங்க விடுதியில் எனக்கு வேலை. என் வேலை சுலபமானதுதான். ஆனால் எப்போதும் அபாயம் அதன் பின்னணியில் ஒழிந்திருக்கும். ‘சாயுங்’ களியாட்டரங்க விடுதியின் ஸீ வலயக் கட்டிடத் தொகுதியில் உட்புற வாகனத் தரிப்பிடத்தில் நான் ஒரு சாதாரண காவல் சிப்பாய். இரப்பர் குண்டுகள் நிரப்பிய அதிநவீன துப்பாக்கியும்ää கறுப்புச் சீருடையும் தந்திருக்கிறார்கள். தீப்;பெட்டிகளை அடுக்கி வைத்தாற் போன்று பரந்து தரித்திருக்கும் வாகனத்தரிப்பிடத்தில் அவற்றை ஒழுங்குபடுத்தும் காவல்சிற்றாழியர்களில் ஒருவன் நான். இரவு பத்துமணி தொடக்கம் காலை ஆறு மணிவரை வேலை.
பணத்தையும் வாழ்க்கையையும் சேர்த்தே பிடுங்கும் “சாயுங்”கின்ää ஸீ வலயமான சூதாட்டக் கிடங்கில் முதலீடு செய்ய வரும் மனிதர்கள்.. தாய்யிகள்.. அரபிகள்.. வெள்ளையர்கள்.. ஆபிரிக்கர்கள்.. விதம்விதமான மனிதர்கள்.. “வர்ணங்கள் வேற்றமைப்பட்டாலும் அதில் மானிடர் வேற்றுமையில்லை” என்று பாரதி பாடியது இந்த இடத்திற்கும் மிகப் பொருந்தும். தனி விமானத்தில் பறந்து வந்து சூதாடிää உடுத்தாடையும் இழந்து தம் தாய்நாட்டுக்கு சாயுங் தெருக்களில் பிச்சையெடுத்தபடியே திரும்பிச் சென்றோரும்ää அதே தெருக்களில் பிச்சையெடுத்து அதை வைத்துச் சூதாடி அதிர்ஸ்ட தேவதை முகம் பார்த்ததால் பண வெள்ளம் கொட்டித் தனி விமானத்தில் வேறு தாய்நாடு தேடிப் பறந்தவர்களும் இருக்கிறார்கள்..! இன்றைய உன் பணம் நாளை என் பணம் என்பது இங்கு எழுதப்படாத விதியாயிருக்கும் போது அபாயம் அதன் பின்னணியிலிருக்காதா என்ன..?
என்ன சொல்ல வந்தேன்.. ஆம்..! நான் தாமோங்.! வாகனத் தரிப்பிடத்pல் காவல் புரிந்து கொண்டும்ää சூதாடிவிட்டு வெளிவரும் வாடிக்கையாளரின் வாகனத்தை முன்பின்னாக எடுக்க உதவுவதிலும் ஈடுபட்டிருப்பேன். வெற்றியுடன் வருபவர்கள் என்னை நோக்கி சில ‘பாத்’களை வீசிச் செல்வர். அவற்றைப் பொறுக்கிச் சட்டைப்பைக்குள் போடுவேன். தோற்றுவிட்டு வருவோர் வீசும் தாயிமொழித் தூஷணச் சொற்களை அப்படியே ‘குவான்ஸோ’ நதியில் வீசிவிடுவேன். எட்டு மணித்தியால வேலை என்றாலும்ää வேண்டிய மட்டிலும் மேலதிகநேர வேலையும் கிடைக்கும். சாப்பாடும்ää தங்குமிட வசதியும் 320 பாத்களும் தருகிறார்கள். தாராளம்.. வாகனத் தரிப்பிட அன்பளிப்புகள் வேறு.. இந்த வேலைக்கு அவர்களின் தாயிமொழி ஓரளவு தெரிந்திருக்க வேண்டும். எனக்கு தாயிமொழி பேசப் புரியும். ஆயின் எனது சொந்தத் தாய்மொழி பேசத்தான் இங்கு யாருமிலர்.
ஆயிரத்து இருநூறு கார்கள் வரிசையிட்டு நிறுத்தியிருக்கும் அழகை ரசித்தபடிää போகும் வரும் வாகனங்களுக்கு உதவியாக சிற்சில சமிக்ஞைகள் காட்டிக் கொண்டிருந்தேன். கதவு திறந்து வெளிப்படும் பிரமுகர்களுக்கு தலைவணங்கி ‘சாலானு’ கூறி வழியனுப்பிக் கொண்டிருந்தேன். திடீரென அரங்கிலிருந்து வெளியே ஒரு தாயிப் பெண்மணியும்ää எனது மேலதிகாரியான ஒரு பாதுகாப்பதிகாரியும் பரபரப்புடன் வருவது தெரிந்தது. அப்பெண் தாயிமொழியில் ஆத்திரத்தில் கிறீச்சிட்டுக் கத்திக் கொண்டே வந்தாள். மேலதிகாரிää ஒரு வாலிபனைப் பிடித்து இழுத்துக் கொண்டு கூடவேää வந்தான். நான் மேலதிகாரியை நோக்கி ஒடிச் சென்றேன். என்ன கலவரமோ..?
நான் ஓடி அவர்களை நெருங்கியதும்ää மேலதிகாரிää “ தாமோங்..! ஹாங்கூ. ஹொக்குந் ஜதாஸியோவ்.! ஜதாஸி.! குனங்குவ்.. மாவோ..!” என்று கட்டளையிட்டான். நான் சற்றும் தாமதியாது பிடித்துவரப்பட்ட அவ்வாலிபனை பின்கட்டாக மடக்கிப் பிடித்துக் கொண்டேன். அந்த வாலிபன் தாயிக்களைப் போலல்லாது கறுப்பு நிறத்தவனாக இருந்தான். தலையை மொட்டையடித்திருந்தான். பார்வைக்கு அப்பாவி ஆசாமி போலும்ää ஆனால்ää தாய்லாந்தின் பாதாளக் கிடங்குவாசிகள் போலும்ää இருந்தான். தாயிமொழியில் என்னவோ சொன்னான். சொன்னது விளங்கவில்லை. முகத்தில் அடி வாங்கியதில் உதடுகள் வெடித்து இரத்தம் கசிந்திருந்தது. அந்தப் பெண்மணி இன்னமும் உரக்க ஏதோ புகார் சொல்லிக் கத்திக் கொண்டிருந்தாள். என் மேலதிகாரி அவளது ஆத்திரத்தை உள்வாங்கிää வருத்தம் தெரிவித்துää சிரித்த முகத்துடன் கவனமாகக் கேட்டுக் கொண்டு அவளைச் சாந்தப்படுத்தினார்...
எனக்கு விளங்கியதிலிருந்துää இவ்வாலிபன் இப்பெண்மணியிடம் அதிக இலாபம் கிடைக்கும் அதிர்ஸ்டச் சக்கரத்தில் பலவந்தமாக முதலீடு செய்வித்து ஆயிரத்திருநூறு பாத்களைத் தோற்க வைத்ததாகவும்ää அதே சமயம் இதற்காக இருநூறு பாத்கள் கமிஷன் பெற்றுக் கொண்டதாகவும் மேலும்ää தனது பெறுமதிவாய்ந்;;த தங்கக் கைக்கடிகாரம் ஒன்றைத் திருடி விட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தாள். பணத்தைத் தோற்ற ஆத்திரத்தில் வாடிக்கையாளர்கள் இப்படிக் குற்றம் சாட்டிச் சண்டைக்கு வருவது இங்கு வழக்கம்தான் என்றாலும்ää கைக்கடிகாரத் திருட்டு நடந்ததில்லை. பாதுகாப்பதிகாரியும்ää அக்கைக்கடிகாரத்தை அவ்வாலிபனின் காற்சட்டைப் பையிலிருந்தே கைப்பற்றியிருந்தார்.
இக்குற்றத்திற்குää இங்கு தண்டணை கொடூரமாகவிருக்கும். பொலிஸில் ஒப்படைக்கு முன்னரே விடுதியின் உள் நிலவறையில் அடைத்து வைப்பார்கள். மணல் நிரப்பப்பட்ட பொலித்தீன் பைகளால் கடுமையாக அடிப்பார்கள். காயம்; ஏதும் இல்லாமல் வலி உயிர் போகுமளவுக்கு இருக்கும். போதுமானளவு அடித்து விட்டு மிகத் தாமதமாகவே பொலிஸாரை வரவழைப்பார்கள்.
அவ்வாலிபனைப் பார்க்கவே மிகவும் பரிதாபமாகவும்ää அதேசமயம் கோபமாகவும் இருந்தது. தாயிப்பெண்மணி அவனை இலேசாக மன்னிப்பதாயில்லை. எனவேää பாதுகாப்பதிகாரி அப்பெண்ணை மேலதிக விசாரணை அறைப்பக்கமாக அழைத்துச் செல்ல முடிவு செய்துää அவ்வாலிபனை என்னிடம் ஒப்படைத்தார்.
‘யஜ்ஜிங்கூவ்.. தாய்க்வ. சாவோங்ää ஸீஙான்..!” (இவனை நிலவறைச் சிறைப் பொறுப்பாளன் சாவோங்கிடம் ஒப்படை.!)
நான் அந்த வாலிபனை துப்பாக்கிமுனையில் சற்றுப் பலவந்தமாக நிலச்சிறையறைக்குத் தள்ளிச் சென்றேன்.. அவனை நடத்திக் கொண்டு வருவதில் ஒரு சிரமமுமிருக்கவில்லை. ஏற்கனவே இங்கு வந்த அனுபவம் உள்ளவனைப் போலத்தான் தோன்றியது. ஏனெனில்ää அவன் முன்னால் நடந்து கொண்டிருக்கும் போதே சந்து பொந்துகளில் தானாகவே திரும்பினான். மற்றதுää போகும் போதே ஒரு தடவை என்னைத் திரும்பிப் பார்க்காமலேää மெதுவாக
“ நுமக்னா ஸதோஜ் பாத் செவுஙீன்? ” என்றான். (உனக்கு எழுபது பாத்கள் வேண்டுமா..?) இதன் கருத்து அவனைத் தப்ப வைப்பதற்குச் சம்மதமா.
“ஜிமஞன் மஸாநு ழய்யீ…லய்யீ..” (நான் மலம் சாப்பிடுவதில்லை.) என்று அவனுக்குப் பிடரியில் ஒரு அறை கொடுத்தேன். புpன்ää நிலவறைக்குள் நெட்டித் தள்ளி விட்டேன். வேகமாகத் தள்ளுப்பட்டுச் சென்று சுவரில் மோதி விழுந்தான்.
00
நிலவறைச் சிறையில் பொறுப்பதிகாரியாக இருப்பவன் சாவோங். சப்பை மூக்குடனும் கொடூரமான இடுங்கிய கண்களுடனும் இருப்பான். பொல்லாத குரூர மனத்தினன். குடித்தால்ää அடிப்பதற்கு யாராவது கட்டாயமாக வேண்டும்.! இன்னும் குடிக்கவில்லை. போலும். நிதானமாக இருந்தான். கூண்டுக்குள் இன்று குற்றவாளிகள் யாருமிலர். வழமையாக இரண்டு மூன்று குற்றவாளிகளாவது இருப்பர். ஆனால்ää நேற்று இங்கு விஜயம் செய்த தலைமைப்பாதுகாப்பு அதிகாரியால் அனைவரும் பொலிஸிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதால் அறை காலியாகவிருந்தது. இப்படி இருப்பதும் ஒரு வகையில் ஆபத்து. ஏனெனில்ää வரும் போகும்ää பாதுகாப்புச் சிற்றூழியர்கள் எல்லோரும்ää குடித்து விட்டு யாரையாவது அடிக்க வேண்டும் போலிருந்தால்ää இங்குதான் வருவார்கள். அல்லது இவன் சாவோங்கே போய் யாரையாவது கூட்டி வருவான். குடிப்பதற்கும்ää அடிப்பதற்கும் பங்காளியாக.. சந்தர்ப்பத்தில் பல குற்றவாளிகள் இருந்தால்ää அடிகள் பரவலாக எலலோருக்கும் பகிரப்பட்டுவிடும். ஆனால்ää இவ்வாலிபனின் துரதிர்ஸ்டம்.. இன்று இவன் மட்டும் தனியாக.. சகல அடிகளையும் வாங்கியாக வேண்டும்.
பொறுப்பதிகாரி சாவோங் மகிழ்ச்சியடன் எழுந்தான்.. இரும்புக் கம்பிக்கூண்டுக் கதவை இழுத்துச் சாத்தினான். மோதி விழுந்த அந்த வாலிபன்ää விரைவாக ஓடிவந்து கம்பிக் கதவுகளைப் பிடித்துக் கொண்டு
‘ஞா.. ஸொல்ங்கவு.. சஜ்ஜி லாங்கூ.. சஜ்ஜி லாங்கூ!” என்று கத்தினான்.
‘சஜ்ஜிலாங்கூ தாவோயிங்.. பொலிஸ்லு நுஞ்சி கட்கு வாணங்கோவ்..’ இறுக்கமான முகத்துடன் சொல்லி விட்டுää சாவோங்கைப் பார்த்தேன். சாவோங் தன் கண்களை இடுக்கிக் கொண்டு.
‘நாஞ்சுக்கு சன்வியாவோ..தாமோங்.!’ என்று என்னிடம் கேட்டான். (பசியோடிருந்தேன். புதிய பட்சி கிடைத்திருக்கிறது தாமோங்.)
‘சோய்ங்.. சாஜூ!” (அடித்துச் சாப்பிடு) என்று வெறுப்புடன் சொன்னேன். .
‘ஞா.. சோல்வர்..! ஞா.. சோல்வர்..!’ (நான் நிரபராதி.. நான் நிரபராதி.. ) கூண்டுக்குள்ளிருந்து அந்த வாலிபன் கூப்பாடினான். அவனது கெஞ்சுதலுக்கும்ää கூப்பாடுகளுக்கும் செவி கொடாமல் சாவோங் கூண்டுக்குள் கைவிட்டு துப்பாக்கியால் அவனை ஒரு இடி இடித்தான்.
‘ஆ….!.’ கதறித் துடித்தபடியே நிலத்தில் விழுந்தான் அவன். இதைப் பார்த்துக் கொண்டு நிற்க என்னால் முடியாது. எக்கேடாவது கெட்டுப் போகட்டும். இனி அவன் பாடு.. சாவோங் பாடு.. இப்படி எத்தனையோ கேஸ்கள் பார்த்தாயிற்றே.. ‘ ஜய்.. சாவோங்..! நுய்ஞ்ஙாய் ஸல்மோவ்’ என்று சொல்லி விட்டு நடந்தேன்.
எனக்கு பசியெடுத்தது. வாகனத்தரிப்பிடத்தை விட்டும் நீங்கி வந்ததால்ää பொருளாதார இழப்புகளும் இருந்தன. விரைவாக வந்து மறுபக்கத்திலுள்ள சிற்றாழியர்களின் உணவுக் கூடத்துள் நுழைந்தேன். பலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். எங்கும் பளீரென சுத்தம். காதுகளில்ää தாய்யின் இசைமேதை லாஜூனின் புகழ்பெற்ற “தாயீ..தாயீ.. ஸென்மஹோ..வொக்சஙீ..…” ஒலித்துக் கொண்டிருந்தது. உணவு அட்டையை இயந்திரத்தில் காட்டி இரண்டு தமிஸ_ம்ää கோலாவும் பெற்று வந்து ஓரமாக உட்கார்ந்தேன். சாப்பிடும் போது. மனம் கோவில்பற்று புட்டுக்கும்ää தேங்காய்ச் சம்பலுக்கும் ஏங்கியது. விரைவில் சாப்பிட்டு துரிதமாக வாகனத்தரிப்பிடம் திரும்பினேன். நேரம் அதிகாலை நாலரை மணியாகி விட்டிருந்தது. அதிகமான வாகனங்கள் போய்விட்டிருந்தன. என் காவலரணில் போய் நின்று கொண்டேன்.
என்னவோ காரணமின்றி என் நினைவுகள் என் பிறந்தகமான கோயில்பற்று நோக்கி அலைந்தன.. எத்துணை இன்பமான பூமி.. சொர்ணமக்கா வளவின்ää முருங்கைமரங்களின் அடர்த்தி.. ஆறுமுகத்தார் வாத்தியாரின் கத்தரி.. வெண்டித் தோட்டங்கள்.. திலீபனின் ரேடியோக்கடை.. “அச்சம் என்பது மடமையடா.. அஞ்சாமை திராவிடர் உடமையடா..” ஊN 114 இலக்க சபாரத்தினம் போஸ்ட்மாஸ்டரின் ‘பேஜோ’ கார்.. (ஒரு அஞ்சடி தூரம் தள்ளி விடுறிரே..தாமுப்பெடியா..?) மாரியம்மன் கோவிலடி.. சிதம்பர சக்கரம்.. தேர்.. சிற்பத் தூண்கள்.. வாரத்துக்கொரு திருவிழா.. காப்புக்கட்டு.. விரதங்கள்.. விஷேசங்கள்.. ஊத்தப் பரஞ்சோதியின் தோசைக்கடை..
மாபெரிய ஆலமரத்தடியில் பஸ் தரிப்பிடம்.. நிழற்குடையம்ää தண்ணிர்ப் பந்தலும்ää உபயம்: அமரர் நல்லதங்கம் மாணிக்கம் 1937. மரத்தடியில் வீமனின் திடீர் தோசைக்கடை.. உடனடி உழுந்து வடை.. ராஜியக்காவின் ஆலங்காய்ப் பணிகாரம் பச்சை ஈர்க்கிளில் கோர்த்து.. ஒன்றுää ஐம்பது சதம்… முருகன் தியேட்டரில்ää புரட்சி நடிகர் எம்ஜீ.ஆர் நடிக்கும்ää முகராசி.. அதன் பாட்டுப்புத்தகங்கள்.. வீரகேசரி..
உட்புற வீதியில்ää சரஸ்வதி அரச தமிழ்க் கலவன் பாடசாலை.. கல்வியே கருந்தனம்..! உடையார்ப்போடி மாணிக்கம் சனசமூக மண்டபம்.. முன்னால்ää கல்லுப்பிள்ளையார் உண்டியல்.. நவம் மாஸ்டரின் முத்தமிழ் இலக்கியக் கழகம்.. அளிக்கும்ää “வெளிநாட்டு மாப்பிள்ளை” நகைச்சுவை நாடகம்.. டிக்கட் விற்கும் முருகப்பன்.. பெண்வேடம் சுரேஸ்.. அசரத்தினம்.. குமாரன்.. சிவக்குமார்.. தியாகமூர்த்தி.. ஜோஸப்பு.. நவநீதராசா மாஸ்டரின் மகள் சுபோதினி.. அவளது மயக்கும் கண்கள்.. காதல்கடிதம்.. கைக்குட்டை பரிமாற்றம்.. மற்றும் வேதா.ääசுகுணகுமாரி.. கமலாம்பிகை.. வீட்டுக்குள்ää நாகலிங்கம் மாமா.. தங்கச்சி சரோஜா.. மருமக்கள் அமுதன்ää சஜிக்குட்டி.. எண்பத்திரண்டு வயதில் கூட அநியாயமாகக் கொல்லப்பட்டு விட்ட அப்பாவின் பிரிவுத்துயரில் ஆழ்ந்து நோய்ப்பட்டு சென்ற மாதம் காலம்சென்ற.. அம்மா.! .அம்மாவின் சாவுக்கும் போகவில்லை.. …அம்மா…அம்மா…
‘அம்மா…நான் எங்கேயிருக்கிறேன்.? யாருக்காக.. ? எதற்காக..? ஏன்..? இந்தத் தாய்மொழி கேட்காத தூரத்தில்.. தாய்யிமொழி குடைகிற தேசத்தில்.. இன்னும் எத்தனை காலம்..? எவ்வளவு நேரம் இப்படி இருந்தேன்.. நினைவுப் பெருங்; கடலில் ஆழந்து..?
“தாமொங்..! ஞே.. தூமோஜுஸிக்.. பாஞச்சிக் காவ்ங்லே!” (தாமோங்.. ஏன் அழுதிருக்கிறாய்..?)
திடுக்கிட்டுச் சுதாகரித்துக் கொண்டேன்.. மணி 5.57. அடுத்த ஆள் வந்துவிட்டான். இரண்டரை மணிநேரம் ஒரு நிமிசத்தில் பறந்து விட்டிருந்தது.. ஒருநாளுமில்லாதவாறு ஆழ்நத தாய்மண் நினைவுகள்..
‘ஸில்யாங்.. சாய்யிக்.. சாஞ்.. !” (சில பிரிவுத்துயரங்கள்.. ஸில்யாங்..!) என்று சும்மா சிரித்து விட்டுää எனது பொறுப்புக்களை ஸில்யாங்க்கிடம் ஒப்படைத்து இயந்திரத்தில் விரலடையாளம் பதித்து ஓய்வடைந்தேன். போகத் திரும்பினேன்.
00
நான் மறுபடி நிலவறைப் பக்கமாக நடந்து சென்றேன்.. சீருடை மாற்ற வேண்டும். மனம் சரியில்லை. 97 கிலோமீற்றர் தூரத்தில் ‘காமுங்’ நகரில் உள்ள ‘தாய்’ப்பிள்ளையார் கோயிலுக்கு எப்படியும் இன்று போக வேண்டும்.. இலட்சாதிபதியான இந்திய அய்யர் இருக்கிறார். களியாட்டரங்கிலிருந்துää பெரும்பாலோனார் சென்று விட்டிருந்தனர். துப்புரவுத் தொழிலாளர்கள் வந்து கொண்டிருந்தனர். பாதுகாப்புக்கூடம் அமைதியடைந்திருந்தது. சிற்றூழியர் அறைக்குச் சென்று என் சீருடையை மாற்ற முயன்ற போதுää…
திடீரென என் உடல் முழுவதும் திடுக்கிட்டுக் குலுங்கியது. நான் துணுக்குற்றேன்.. ஒரு அவலமான அழுகுரல் என் செவியில் மெதுவாகக் கேட்டது போலிருந்தது. உற்றுக் கேட்டேன்.. ஆம்..! பாதுகாப்புக் கூண்டுக்குள்ளிருந்துதான் அந்த அழுகுரல் கேட்டது. இப்படி எத்தனையோ அவலக்குரல்கள் அடிக்கடி கேட்டிருக்கிறேன்.. பொருட்டாகக் கருதாமல் அலட்சியம் செய்துää என் வேலையைப் பார்த்துக் கொண்டு பறந்து விட்டிருக்கிறேன்.. ஆனால்.. இந்தக் குரல்..? அதன் அவலம்.. அதன் ஒலியமைப்பு.. அதன் இராகம்.. அதன் தாய்மொழி…? தாய்யி மொழி..? என்னது.. என்னது.. காதுகளைக் கூர்மையாக்கிக் கேட்டேன். அந்த அழுகையின் மொழி…?
‘என்ர அம்மோ..வ்…!’
என் சர்வாங்கமும் கூசி மயிர்க் கூச்செறிந்தது.. இந்த மொழி;.. தாய்யி மொழி அல்ல… சொந்தத் தாய்மொழி.. எத்தனையோ வருடங்களின் பின் காதுகளில் விழுந்த அந்த இன்பத் தமிழ் மொழி… தாய்மொழி.. தமிழழுகை…! தாய்மொழியின் அழுகை.. வேதனையின் போது அடி உணர்விலிருந்து யாராலும் தடுக்கவொண்ணாமல்ää பீறிட்டெழும் உண்மைமிக்க சுய மொழிப் புலம்பல்..!
யாரது..? அவனா அலறினான்..? அந்தக் குற்றவாளி வாலிபனா..? அல்லது வேறு யாராவது தமிழனா..? மனம் படபடத்தது.. கால்கள் சற்றே நடுங்கின.. மெதுவாக அடியெடுத்து வைத்து வர முயன்ற போது மறுபடியும் அந்த அவலமமான அழுகுரல்ää மன நிம்மதி வேண்டி மிகச் சத்தமிட்டு வாய்விட்டு அரற்றிக் கொண்;டிருந்தது..
;என்ர அம்மோவ்..! என்ர கடவுளே..! …ம்ம்ம்ம்ம..மாஆஆஆ.. நோ…கு..து…!”
என் இரத்த நாளமெல்லாம் புடைத்தெழுந்தன.. விரைந்து பாதுகாப்புக் கூண்டை நோக்கி நடந்தேன். உள்ளே தயக்கத்துடன் பார்த்தேன். அவன்தான்.. நான் பிடித்து வந்து தள்ளிய அந்த வாலிபன் மண்டியிட்டு உட்கார்ந்தபடிää முழங்கால்களிடையே தன் கைகளை வைத்துக் கொண்டு கண்களைப் பாதி மூடிக் கொண்டு வேதனையால் அரற்றித் தீர்த்துக் கொண்டிருந்தான். தமிழனா இவன்..? தாய்யீயா..? யாரிவன்.. என்ன பெயர்..? எங்கிருந்து வந்து எங்கு சேர்ந்திருக்கிறான்..? பாதாளத் திருட்டுக் கும்பல்களுடன் எப்படித் தொடர்பு..? ஏன்..? என் கேள்விகளுக்கு யார் பதிலளிக்க..?
இரும்புக் கம்பியைச் சற்றுத் தட்டினேன். அவ்வாலிபன் நிமிர்ந்து பார்த்தான்.. மருட்சியுடன் மிரண்டான். அடுத்த அடிக்கு ஆள் வந்து விட்டதாக எண்ணிப் பீதி கக்கும் விழிகளுடன் என்னை நோக்கினான். என்னையும் ஒரு தாய்யிக்காரனாக எண்ணிப் பயந்து போய் “ஞா.. சோல்வஙீ.! ஞயக் காஜிங்க்கா ஸ{..ஸாங்…” (நான் நிரபராதி.. எனக்கு அடிக்க வேண்டாம்.. மதிப்புக்குரியவரே..) என்று என்னைக் கையெடுத்துக் கும்பிட்டான். நான் ஒன்றும் பேசாமல் அவனைப் பார்ததேன். இவனிடம் தமிழ் பேசினால் மிகப்பெரும் மகிழ்ச்சியடைவான்.. இன்பத்தேன் வந்து இவன் காதுகளில் பாயும்.. பட்ட அத்தனை வேதனைகளும் நொடிப் பொழுதில் பறந்து விடும். ஆயினும் பேசக் கூடாது. இன்பத் தேனைப் பாய்ச்சக் கூடாது. இவன் குற்றவாளி.. எந்த நாட்டவனாகää எந்த இனமாக இருந்தாலும்..! இருந்தாலும்..?
கூண்டுக்கு வெளியேää சாவோங் மேஜை மீது சாய்ந்தபடி சற்றே தூங்கிக் கொண்டிருந்தான். விடியவிடிய அடித்தää குடித்த களைப்பில் அயர்ந்திருக்கிறான்.. எனக்கு ஒருநாளுமில்லாதவாறு ஆத்திரம் பொத்துக் கொண்டு பரவியது. ஆயின் என் செய்ய..? என் ஆளரவம் கேட்டுச் சட்டென விழித்தான்.
‘ச்சாங்க்.. தஸ்ஜாங்..சரபாவ்ஜ்..? தாமோங்க்..?’ (அவனைச் சாப்பிட வேண்டுமா உனக்கு.. தாமோங்க்.)
பல்லைக்கடித்தபடி அவனைப் பார்த்தேன். அசதியுடன் எழுந்த சாவோங்க் “ஸஜ்கிங்.. ஞாஸீஞ்ஜின் பய்ஜவாவோவ்..” ( சற்று நின்று கொள். இதோ வருகிறேன்.) என்று என்னிடம் சொல்லி விட்டு கழிவறைப்பக்கமாகச் சென்றான். இன்னொரு காவலதிகாரி தூரத்தில் நின்று கொண்டு துப்பாக்கியைக் கழற்றிப் பூட்டிக் கொண்டிருந்தான்..
“என்ர கடவுளே..! என்ன இதுலருந்து காப்பாற்றப்பா பிள்ளயாரே..! என்ர அம்மோ..வ்..”
கூண்டுக்குள்ளிருந்து தமிழ் அரற்றல் தொடர்ந்தது. நான் அனுதாபத்துடன் அவனைப் பார்த்தேன். குற்றம் செய்தவனைக் கூடக் காப்பாற்ற பிள்ளையார் வேண்டும்.. நான் என்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவனை உறுக்கினேன். “ஜங்ஙியாஸ்.. ஞானுக் ? தாமிங்.. ஜா..க்.!?” (திருட்டு நாயே.. என்ன புலம்புகிறாய்..? என்ன பாஷை அது..?)
அவன் தன் புலம்பலை நிறுத்தி என்னை பயத்துடனும் அசதியுடனும் பார்த்துவிட்டுää “ தமிழுங் ஞா.. மாஙேப தய்ப்..” என முனகினான். (தமிழ்.. என் தாய் மொழி..) திடீரென எங்கோ பார்த்துää கைகளைக் கூப்பினான். தனது வீங்கிப் போயிருந்த முழங்கால்களையம்ää பாதங்களையம் தடவித்தடவி முனகினான். பின் மெதுவாக முணுமுணுத்தான்.. “என்ர கடவுளே..ய்… என்ர சீவனிருந்தா நான் கதிர்காமத்துக்கு வந்து உதடு குத்தித் தேரிழுக்கன்.. என்ர பிள்ளையின்ர தோழுல காவடி ஏத்துரன்.. முருகப்பா.. கடவுளே..ய்.. என்னக் காப்பாத்தப்பா…”
இதற்கு மேல் நான் சற்றும் தாமதிக்கவில்லை. சவோங் கழிவறைப்பக்கம் போய்வி;ட்டான். மற்றக் காவலதிகாரி நானிருந்த தைரியத்தில் எங்கோ வெளியில் பார்த்துக் கொண்டிருந்தான். நான் இரும்புக் கூண்டைப் பார்த்தேன்.. பூட்டப்படாமல்ää இரும்புத் தாழ்மட்டும் போடப்பட்டிருந்தது. விரைந்து செயற்பட்டேன். தாழை இழுத்துக் கதவைத் திறந்தேன். அவ்வாலிபன் பயத்துடன் “ஙா…ஆஆ…” என்ற கதறியபடி எழுந்திருக்க முயன்று விழுந்தான். நான் அவனுடன் ஒன்றும் பேசாமல்ää திறந்த கதவைக் காட்டி “ஙெய்க் ஜஸ்ஸி.. ஜஸ்ஸிங்” என்று மெதுவாகச் சொன்னேன். (தப்பி ஓடிவிடு) ஆனால் என் கண்களில் சிநேகித பாவத்தைக் காட்டவில்லை. அவன் சற்றும் நம்பாமல் என்னைப் பார்த்தான்.. ஓடவிட்டுப் பிடித்து பலமாக அடிப்பேன் என்று சந்தேகத்துடன் இல்லையென்ற பாவனையுடன் தலையை அசைத்தான்.. ஆனால் என்னை நோக்கிக் கும்பிட்டபடியிருந்தான்.. தவழ்ந்து வந்து என் கால்களைப் பிடித்தான்..
நான் அவனை எட்டித் தள்ளிவிட்டுää அவனைப்பார்த்துää கொஞ்சம் சிரித்து நம்பிக்கையூட்டி மறுபடியும்ää “ஙெய்க் ஜஸ்ஸி.. ஜஸ்ஸிங்” என்றேன். என்னைத் தமிழனாகக் காட்டிக் கொள்ளாமல்.! அவன் தன் காற்சட்டைக்குள் கைவிட்டுத் தடவிக் காட்டிää “ஙாகசஙீய்.. சவ்கம ஸஜிமங் பாத் மனரைதஙி” என்று முனகினான். (என்னிடமிருந்த எழுபது பாத்களையும் அவன் பறித்து விட்டான். உனக்குத் தர ஒன்றுமில்லை.)
நான் ஆத்திரத்துடன்ää அவனை அறைந்தேன்.. பொங்கி வந்த தமிழைக் கஸ்டப்படுத்திக் கட்டுப்படுத்திக் கொண்டுää “அடப்….ஞாய்யீங்.. ஸீமுக்கூ..” ( ஓடித் தெலைந்து விடுடா அற்பனே ..!) என்று அவனது சட்டையைப் பிடித்து தூக்கித் தள்ளி விட்டேன்.
என் தீவிரத்தை உணர்ந்த அவன் ‘விருட்’டென்று எழுந்தான். நான் வெளியில் எட்டிப் பார்த்துச் சமிக்ஞை செய்ததும்ää நொண்டிய கால்களைப் பொருட்படுத்தாமல்ää பல்லைக் கடித்தபடி விரைவாக வெளி வந்தான்.. நான் அவனை மற்றக் கழிவறைப்பக்கமாக நடத்திச் சென்றுää பின்பக்க வழியால் ஓடிவிடும்படி சைகை செய்தேன். இனி அவன் தாமதிக்கவில்லை. “தாய்ப்பிள்ளையாரப்பா….!” என்று கூவி என்னை நோக்கிக் கும்பிட்டான். ஏற்கனவே இவ்வழியால் பழக்கப்பட்டவனைப் போல அந்தக் கழிவறை வழியாக நுழைந்து குப்பைக்கிடங்குப் பக்கம் அபாயமாக ஆனால் கவனமாக நொன்டியபடி நடந்து சென்றான். அங்கிருந்த குட்டைச் சுவரில் ஏற முயன்று முயன்று விழுந்தான்.. பாதுகாப்பதிகாரிகள் கண்ணில் பட்டால்ää இரப்பர் குண்டுகள் சீறிவரும்… நான் பதைபதைக்கும் நெஞ்சுடன் பார்த்துக் கொண்டிருக்க.. அவன்ää அடுத்த தடவை முழு உந்துதலில் கட்டைச் சுவரைக் கடந்து பாய்ந்து வெளிப்பக்கம் விழுந்து விட்டான்.. “அம்மா..ஆஆ..!” என்ற வேதனைக்குரல் தமிழ்மொழியில் என் தாய்மொழியில் மெல்லிய சத்தமாக வந்து பாய்ந்தது காதினிலே.. இனி அவன் தப்பிவிடுவான்..!
எனக்குள் ஒருநிம்மதிப் பெருமூச்சுப் பிறந்தது. உண்மையிலேயே ஏதோ ஒரு கடவுட் தன்மையை அடைந்ததைப் போன்றுணர்ந்தேன். தத்தம் தாய்மொழிக்காக எத்தனையெத்தனையோ தியாகங்கள் செய்த புனிதர்களிடையே என் தாய்மொழிக்காக நான் இது கூடச் செய்யாவிட்டால் என் தாய்மொழிதான் என்ன..? திடீரெனää ஏதோ விசித்திர உணர்ச்சியால் திடுக்கிட்டேன். பயத்துடன் திரும்பிப் பார்த்தேன். என்னை விசித்திரமாகப் பார்த்தபடி நெருங்கி வந்து கொண்டிருந்தான் சாவோங். 0 (2007.11.11)
8888888888888888888888888888
No comments:
Post a Comment