Friday, October 27, 2023

மீள்தகவு-(வெள்ளிவிரல்-சிறுகதை-7)

  மீள்தகவு

 பேரு.?

 

முகம்மது யூசுப் அப்துல்லா.

 

ஊரு.?

 

காங்கேயனோடை.. மட்டக்களப்பு.

 

என்ன விஸயமா வந்தீங்க.?

 

சேர்..போன மாசமும் வந்திருந்தன்.. ந்த  அங்கயினருக்கான  உதவிக் காசு வெசயமா.... ந்தா இரிக்கி சேர் என்ட பைல் நம்பர்..

 

ஙா.. சரி.. சரி.. அதுல ஒரு ரிப்போர்ட் குறையுது.. அதுதான் உம்மட பைல் பெண்டிங்ல கிடக்குது..

 

ரிப்போட்டுக் கொறைதா.. போன மாசந்தானே சேர் ரெண்டு சேட்டிகட்டுக் கொறைது எண்டு சொன்னீங்க.. அதுகளக் கொணந்து தந்துட்டனே சேர்..

 

அது ஜீயெஸ் ரெகமண்டேசன்..!  பொலிஸ் என்ட்ரி!! அதெல்லாம் சரி.. ஆனா இது வேற.. இது டயக்னஸிஸ் கார்ட்.. அது பைலில இல்லை.

 

டைக்னிஸா.. அப்பிடியெண்டா..?

 

அந்த நேரம் நீர் ஹொஸ்பிட்டல்ல அனுமதிச்சிப் பதியிற கார்ட் அது. ஹொஸ்பிட்டல் ரிப்போர்ட்டு..

 

அதுவும் எடுக்கனுமா..

 

எடுக்கனும்.. எடுத்துட்டு வாங்க.

 

ப்ப எப்பிடி சேர் எடுக்கிற.. ஊருக்குப் போய் வெரனும்.. ரெண்டு கௌம ஆய்டும் சேர்.. நான் கை வெளங்காதவன்.. டக்டக்கெண்டு போக ஏலா சேர்.. அதுவும் கௌக்கு மாகாணம்.. கரச்சல் கூடின ஏரியா சேர்.. சேர் அது ல்லாம  செய்ய ஏலாதா.. சேர்..?

 

அதுக்கு நான் என்ன செய்ற.. கார் பிடித்துத் தரவா.. ஒண்டும் அவசரமில்ல.. ஊருக்குப் போய் அத எடுத்துட்டு அடுத்த மாதம் வாங்க.. வரேக்க நல்ல கஜூக் கொட்ட அரைக் கிலோ எடுத்திட்டு   வாங்க. இங்க பெரியவருக்கு கொடுக்கனும்..

 

அடுத்த மாசமா..என்ன சேர் இது.. நான் ஒண்டுக்கும் ஏலாதவன்.. ஏள..  ஒதவிபதவி ல்லாதவன்.. ப்பிடி அலய வெக்கிறீங்க..  எம்பத்தாறு எனக்கலவரத்துல  என்ட கை பிஞ்சி பறந்த சேர்..  இதப் பாருங்க.. ஒத்தக் கய்  ல்ல.. கஜுக் கொட்ட  கொண்டாரன்.  பாத்துச் செய்ங்க சேர்.. நான்;  போன மொறையும் தயிருப் பானயும்ää கொளுக்கட்டயும் கொண்டு தந்த.....

 

என்ன மடத்தனமாப் பேசறீங்க மிஸ்டர்.. டயக்னஸிஸ் ரிப்போர்ட் இல்லாம பைல எப்பிடி சப்மிற் பன்ற.. எக்கவுன்டன் மூலக் கொதியன். மூஞ்சியில விட்டெறிவான்.. உம்மட பைல. எனக்கு நீர் ஒண்டும் ~கவனிக்கத்தேவல்ல. ஆனா டயக்னஸிஸ் கார்ட் கொணந்தாச் செரி..போங்க. போங்க.. எனக்கி கன வேல கிடக்குது..

 

அப்பிடியெண்டால்  ஏலாதா சேர்.?

 

ஹையோ.ää ஏய்..! விக்டர்பெரேரா!  மெ மனுஸ்யாவ பொட்டக் எலவன்டக்கோ

 

செரி செரி கோவிக்காதங்க சேர்.. அத எடுத்துட்டு வாரன்.

 

                                    ()

 

 

பேரு.?

 

முகம்மது யூசுப் அப்துல்லா.

 

ஊரு.?

 

காங்கேயனோடை.. மட்டக்களப்பு.

 

எப்ப நடந்த.. ப்பு?

 

எம்பத்தியாறாமாண்டு எனக்கலவரத்துல.. ஐயா.

 

எங்க?

 

ஊருலதான் ஐயா

 

எந்த ஆஸ்பத்திரியில மொதல்ல இருந்த நீர்?

 

ஞ்சதான் ஏத்தி விட்டாங்கள் ஐயா

 

திகதி தெரியுமா.. ப்பு..?

 

எம்பத்தாறு  சித்திர மாசம் தேதி பதுனாறு ல்லாட்டிப் பதுனேளு

 

தேடனும்.. ஆள் லீவு. போய் அடுத்த மாசம் வாரும்

 

நாளக்கி கொளும்புக்கு அனுப்பனும் ஐயா நானு

 

அதுக்கு.நானென்ன செய்ற ப்பு..நீர் முந்தியெல்லே வந்திருக்கனும்.

 

முந்தி அங்க கேட்கயில்ல ஐயா! ப்பதான் ஒண்டொண்டாக் கேக்காஹ

 

அங்க கேட்காததற்கு நானா பழிஅடுத்த மாசம் வாரும். வரேக்க கொஞ்சம் சுத்தமான பசுநெய் ஒரு போத்தலும் கொண்டு வாரும் சரியே..?

 

கொஞ்சம் மனசு வெய்ங்க ஐயா.. எனக்கலவரத்துல  எங்க வாப்பா  மீன் யாவாரத்துல போனவரு.. கடத்தி மௌத்தாய்ட்டாரு.. அவரத் தேடிப் போன எனக்கி  புலிப்பட வெடி வெச்ச. ந்தக் கய் பிஞ்சி பறந்துட்டு ஐயா!

 

புலியெண்டு சொல்லாதப்பு.. ஆமிக்காரன் சுட்ட யெண்டு சொல்லு. ப்படி ஆயிரம் புராணம் கேட்டுட்டன் அப்பு. எண்பத்தியாறாம் ஆண்டு என்டால்ää எப்.ஆர்.ஐ பாக்கனும்.  அதுக்கு ஏ.ஓ. வேணும். சப்ஜக்ட் செய்யிற பொம்புள பிள்ளத்தாச்சி லீவு. வரியத்தில மூணு பிள்ளப் பொறுவாளப்பு.. பசுநெய் மலிவா எடுக்கலாமா அந்தப் பக்கம்..?

 

ஐயாää காலப் புடிச்சன். அவிசிரம். ஐயா.. பசிநய் கொண்டாரன். கொஞ்சம் எரக்கம் காட்டுங்க..நா  அங்கயீனன்..  என்ட கய்யப் பாருங்க..

 

கைய முகத்துக்கு நீட்டாதப்பு.. புண் மணக்குது.. அவிசிரமா எடுக்கிறதாயிரிந்தால்ää ஒரு வேல செய்யுமன். இது ஹொஸ்பிட்டல் பொலிஸ் பதிவுலயும் இருக்கும். அங்க போய் என்னத்தையும் நீட்டினயெண்டால் உடன எடுக்கலாம் நீர்.

 

நீங்க தர மாட்டீங்களா ஐயா

 

தமுள்ளதானே சொல்றன். சப்ஜக்ட்டு ஆள் மெற்றனிற்றி லீவு.  ஏ.ஓ.தான் அது பார்க்கிற. நானில்லப்பு. பசுநெய் போத்தல் என்ன விலையப்பு?

 

அவரு ஏயோ எப்ப வெருவாரு?

 

அது அவரின்ற பெண்டிலுக்கெல்லே தெரியும். எனக்குத் தெரியாது..

 

அப்படிண்டால்..?

 

போய் அடுத்த  மாசம் வாரும். புலி சுட்ட எண்டு சொல்லாதப்பு. ஆமி யெண்டு சொல்லு. அப்பதான் லேசா ரிப்போட்டுக் கெடக்கிம். போ..போ.. பசுநெய்ய மறந்துராதப்பு..

                                    ()

 

 

நம..நம..பேரு.?

 

முகம்மது யூசுப். அப்துல்லா.  மஹத்தயா.

 

கம?

 

காங்கேயனோடை.. வெற்றிக்கலோ மாத்தையா

 

கவதா மெ சிதுவுனே..?

 

சிங்குளம் தெரியா மாத்தையா

 

ஹெட்ட என்டகோ

 

கய்ல.. துவக்கு வெடி பட்ட..

 

ஹெட்ட..ஹெட்ட என்னங்கோ..

 

எம்பத்தாறு எனக் கலவரத்துல ஆமிக்காரன் வெடி வெச்சி

 

-மே...  மச்சான்.!  பொட்டக் என்டகோ.. மெயா கியன்ன பொட்டக் அஹன்டகோ.. மொனஹரி கியனவா முக்குத் தேருன் நே..

 

அந்த மாத்தயாக்குத் தமுள் தெரியிமா  ஸேர்?

 

அடோ ஆர்ரா நியி?  கய்ல என்னடா பொல்லு.?

 

கய் ஒண்டு ல்ல மாத்தையா.. எம்பத்தாறு எனக்கவரத்துல.. ஆமிக்காரன் வெடி வெச்சி கய் பிஞ்சி பறந்துட்டுது மாத்தையா.. வாப்பாவும்..

 

புலி சுட்ட எண்டு செல்லண்டா பண்டி.! நீ ப்ப என்னடா வந்த?

 

இதப் பாருங்க மாத்தையா.. ந்த ரிப்போட்டு வேணும்.. மினிஸ்ட்டியில் கேக்காஹ.. ஒதவிக் காசி எடுக்க ரெண்டு வரிசமா அலையிறன்..

 

டெ.. இது ஒஸ்பிட்டல்ல எடுடா  பேயா..

 

ஒஸ்பிட்டல்ல அடுத்த மாசம் வரச்சொல்றாங்க மாத்தையா.. ஆள் லீவாம்.. இதுல ஒரு விராஞ்சி’ ஞ்சயும் இருக்குதாம். ஞ்சதான் எடுக்கச் சென்னாஹ.. எனக்கி இது அவிசரமா வேணும்.. மாத்தையா..

 

என்னடா அவிசிரம்.. போய் அப்பிடி நில்றா நாயே..

 

செரி மாத்தையா நிக்கிறன்.. ண்டைக்கு எடுக்கலாமா மாத்தையா..

 

அம்மட ..ண்டைக்க எடுக்கலாம். போய் சோடா ரெண்டு போத்தலும் சிக்கிரட்டு ஒரு பக்கட்டும் வாங்கிட்டு முத்திரக் காசி இருநூறுவாவும் வேறயா கவருல போட்டு எடுத்துட்டு வாடா வள்ளா

 

செரி மாத்தையா  நான்  அங்கயீனன்.. ண்டைக்கி

 

வள்ளா.. ரிப்போட்டுல ஸைன் பண்ற ஓஐஸி குடிச்சிட்டுப் படுக்கான்.. போய் எழுப்பி ஸைன் வாங்குவியாடா பேயா.. புடிச்சி மத்தக் கய்ய முறிச்சி ரிமாண்டுல போட்டு மூத்திரம் பருக்குவான்..

 

அப்ப நாளக்கி வெரயா மாத்தையா..?

 

மொதல்ல  சிக்கிரட்ட வாங்கிட்டு வாடா சொத்திக் கய்யா..

                                  

()

 

 

பேரு.?

 

முகம்மது யூசுப் அப்துல்லா.

 

ஊரு.?

 

காங்கேயனோடை.. மட்டக்களப்பு.

 

என்ன விஸயமா வந்தீங்க.?

 

சேர்..போன மாசமும் வந்திருந்தன்.. ந்த  அங்கயினருக்கான  உதவிக்  காசு வெசயமா....ந்தா இரிக்கி சேர் என்ட பைல் நம்பர்...

 

ஙா.. வந்துட்டியா..?  கஜுக்கொட்ட  கொண்டு வரயில்லயா சரி..சரி..  நீங்க அனுப்பின ரிப்போர்ட்டு கெடச்சிருக்கு. அது நாங்க கேட்ட டயக்னஸிஸ் கார்ட்  ல்லை. பொலிஸ் ஹொஸ்பிட்டல் ரிப்போர்ட்.  அதுலயும்  முந்தி புலி சுட்ட என்று நோட் இருக்கு.. ப்ப ஆமி சுட்ட எண்டு ரிப்போர்ட் சொல்லுது.. அது மட்டுமில்ல.. இதுல  ஒஸ்பிட்டல் ஏஓ ஸைன் பண்ணாம பொலிஸ் ஓஐஸி ஸைன் பண்ணியிருக்கிறான். என்னப்பா..  இது.. ஸேர்க்குலர்ல கேட்ட டயக்னஸிஸ் காட்டுத்தான்  வேணும்.. இதப் பாரமெடுக்க ஏலாது ஐஸே..

 

என்ன ஸேர் செல்றீங்க நான்.. அங்கயீன..

 

அந்தக் கத வேணாம்.. காசி எடுக்கிறதாயிருந்தா நாங்க கேட்ட ரிப்போர்ட்டோட வா..  ல்லாட்டி… ல்லை.

 

அப்பிடியெண்டால்?

 

எல்ல்ல்லாத்தையும் எடுத்துட்டு அடுத்த மாதம் வாங்க..

 

அடுத்த மாசமா?

 

ம்..

 

வேற ஒரு வளியிம் ல்லியா ஸேர்.. நான் கய் ஏலாதவன்.. ஒதவி ல்லாதவன்..

 

இதப்பாரும் ஐஸேää  அறிவில்லையா உனக்கு.. இதுல பாரும்..  அற்றாக்ட் பை ஸம் அந்நோன் பேர்ஸன் சஸ்பெக்ற்றட் தி போர்ஸஸ் .  அதாவது  பாதுகாப்புப்படை  சுட்ட எண்டுதானே எழுதியிருக்கு..  ந்தா இத வாசிச்சுப் பாரும்..  கமட்ட ஆப்பு ஹந்துரு நெட்தி கொட்டி வெடி தபா எத்தி..  புலிப்படை வந்து சுட்ட..  அப்ப எப்பிடி செக் எலவ் பண்ற..  மடையனா அவன்  எக்கவுண்டன்ற்.?

 

ப்ப நா என்ன ஸேர் செய்யனும்..  கஜுக்கொட்ட வாங்யரட்டா..?

 

ஹையோ.. இதெல்லாம் உனக்குச் சொல்லி விளங்காது. ரிப்போர்ட்டு முதல்ல ஒழுங்கா இருக்கணும்.. பிறகுதான் கஜு பிஸினஸ் எல்லாம். ஓண்டு எல்றிற்றி சுட்டயா அல்லது ஆமி சுட்டயா.. சரியான ரிப்போட்ட எடுத்துட்டு வாங்க..

 

ஆருண்டு எப்பிடி ஸேர் செல்ற..?  எனக்கலவரத்துல ஊருல பூந்து அவனும் சுட்டான்.. இவனும் சுட்டான்.. வாப்பாவக் கடத்திட்டுப் போன எண்டு நான் பொறகால ஓடின.. சாக்குமரச் சந்தியில் வெச்சி படபட ண்டு..

 

ஸ்டொப்.  நிப்பாட்டுங்க.. என்னால இத விளங்கப்படுத்த ஏலாது. சரி..  பாத்தால் பாவமாக் கெடக்கு..  சரி.. லேசா ஒரு வேல செய்ங்க.. உங்கட ஊரு  டீஎஸ்ஸிட்டப் போய்  இத வெரிபை செஞ்சி  இதுல ஒரு ஸைன் வாங்கி அனுப்பிடுங்க.. ல்லாட்டி நேருல எடுத்துட்டு வாங்க .. வேல லேசா முடியும். வரேக்க...

 

                                    ()

 

 

பேரு.?

 

முகம்மது யூசுப் அப்துல்லா.

 

ஊரு.?

 

காங்கேயனோடை.. மட்டக்களப்பு.

 

என்ன வந்த.. விடிய எளும்பி வந்துருவீங்க.. ஒப்பிஸில மனிசன கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க விர்ரல்ல..

 

தம்பி.. நான் கய் ஏலாதவன். அங்கயீனக் காசி எடுக்க எல்லா திப்பட்டும் அனுப்பியாச்சி. கடசில இதுல  பெரிய டீஎஸ்ஸி ஐயாட ஒரு ஸனைவேணுமாம்.. இதப் பாருங்க..

 

அத நீட்டாத.. கை நாறுது.. இப்படி மேசையில படாம வய். இதுல ஸைன் பண்ற டீஎஸ் ஸேர்  களம்புக்கு மீற்றிங் போயிட்டாரு.  அடுத்த வாரம் வா..

 

அடுத்த கௌமயா.. ப்ப தெர ஏலாதா தம்பி..?

 

ஏலும்.. ஒரு பிளேன் புடிச்சித் தந்தியென்டால் களம்புக்குப் போய் டீஎஸ்ஸிட்ட ஸைன் வாங்கித் தந்திரலாம்..

 

ஹீ..ஹிக்.. நெல்ல பஹ்டி இது.  தம்பிää டீஎஸ் ஐயாக்கு அய்டடிங்காக ஒத்தரும் ல்லியா.. அவருட்ட வாங்கித் தெர ஏலாதா ம்பி..  எனக்கலவரத்துல என்ட  கய் பிஞ்சி பறந்துட்டு தம்பி.. ஊட்டுலயும் கய்ட்டம்.

 

இனக்கலவரத்துல ஆள் கடத்தலுக்குப் போனா இப்படி வரும்தானே..  கய் நாத்தப் பொணம். தள்ளி எடு..

 

அல்லாறிய சத்தியமா நான் அப்பிடியான ஆளு ல்ல தம்பி.. எங்கு வாப்பாக் கௌவன கடத்திட்டுப் போய்..

 

சரிசரி.. போய் வா.. எனக்கு வேல இரிக்கி.. அடுத்த ஆள் ஆரு.. வாங்க..

 

தம்பி..யம்பி.. காலப் புடிச்சன் வாப்பா இத ஒளுப்பம் முடிச்சித் தா வாப்பா நா ஒண்ட வாப்பாவப் போல..

 

என்ன எளவுடாது.. இது பெரிய வெசயம் காக்காவ்… புலியா.. ஆமியா சுட்ட  எண்டு ஆரு ஸைன் பன்ற..ஆரும் பண்ணுவானா.. பேய்க்கத கதக்கிறாய்.. மொதல்ல ஆரு சுட்ட எண்டு ஊர் விதானைட்ட ஒரு கடிதம் எடு..

 

எடுத்து..?

 

எடுத்துட்டு வா.. அத நாங்க  கவ்ண்டர் ஸைன் பண்ணுவம்..

 

திட்டமா ஆரு சுட்ட எண்டு கேக்கிற தம்பி..

 

உனக்குச் சுட்ட ஆருண்டு எனக்கா தெரியும்.. உனக்கா தெரியிம்..

 

ஆருண்டு எப்பிடிச் செல்ற  ம்பி..?  சந்தியில சைக்கிள்ள திரும்பக்குள்ள படபட ண்டு வெடி.. அந்தப் பக்கம் ஆமிக்காரனுகள்.. .. ந்தப் பக்கம் புலிப்பொடியனுகள்.... ரெண்டு பக்கமும் வெடி.. குறிப்பா எப்பிடிச் செல்ல.. ஒஸ்பிட்ல்ல  ஆமியெண்டு செல்லச் செல்றாஹ.. பொலிஸில புலி யெண்டு செல்லச் செல்றாஹ.. எடையில நான்.. ஆருண்டு எப்பிடிச் செல்லி என்ட காசி எடுக்கிற..?

 

அப்ப வைரவண்ட சாத்திரிட்டப் போய் ஆரு சுட்ட என்று குறி பார்த்து ஒரு கடிதம் வாங்கிட்டு வாரியா.. ஹையோ.. சுட்ட ஆரு என்டாலும் திட்டமா ரிப்போர்ட்டு வேணும்..

 

என்னம்பி.. பஹ்டி பண்றீங்க.. அலஞ்சிலஞ்சி என்ர சீவன் போகுதும்பி..  வேற லேசான வளி ஒண்டும் ல்லியாம்பி..

 

ஏனில்லாம.. இரிக்கு.  எல்லாம் வெல்லலாம்.. உங்கட ஊருல  தாய்தகப்பன் ல்லாத சின்னப் புள்ளயள் எடுக்க ஏலாதா.வீட்ட புள்ளத்தாச்சி.. பொம்பிளக்கி உதவியா ஒரு சின்னப்பிள்ள வேணும்.. பார்க்க ஏலுமா அந்தப் பக்கம்..?

 

நான் எங்க தம்பி தேர்ர.. ந்தக் கய்யோட அலைய ஏலமா..?

 

அப்ப என்ன செய்யப் போறாய்.. போய் டிஎஸ் வந்தாப் பிறகு வாரியா.. போ.. சும்மா ஒத்தக் கைய வீசிட்டு வராமல்  ஊருல விதானையிட்ட ஒரு கடிதம் எடுத்துட்டு வா.. இனம் தெரியாத நபர்கள் சுட்ட என்று ஒரு கடிதம்..

 

செரிம்பி..

                                    ()

 

 

 

பேரு.?

 

முகம்மது யூசுப் அப்துல்லா.

 

ஊரு.?

 

காங்கேயனோடை.. மட்டக்களப்பு.   அங்கயீனருக்கான..............

 

புலோலியூர் க. சதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை.ஞானம். 2006.

 

No comments:

Post a Comment